இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகளிலும் இந்திய அணியை விட பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று வகையிலும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து 3-0 என தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.
24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை அவர்களின் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்யும் முதல் அணி மற்றும் 3 போட்டிகள் அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை இந்திய மண்ணிலேயே வைத்து ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனைகளையை தங்களுடைய பெயரில் எழுதியுள்ளது.
மும்பையில் இன்று நடைபெற்று முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் அவுட்டானது போட்டியை தலைகீழாக திருப்பியது. ஒருவேளை ரிஷப் பண்ட் நிலைத்திருந்தால் இந்தியா 2-1 என தொடரை முடித்திருக்கும். தனியொரு ஆளாக போராடிய ரிஷப் பண்ட் அவுட்டாகி செல்லும்போது மிகவும் அதிருப்தியை வெளிப்படுத்தியவாறு சென்றார்.
இந்நிலையில், மோசமான தோல்விக்கு பிறகு எமோசனாலாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவொன்றை பதிவிட்டுள்ளார் ரிஷப் பண்ட்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டானது இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முக்கிய திருப்பமாக அமைந்தது. இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரராக ரிஷப் பண்ட் மட்டுமே ஜொலித்தார். ஒருவேளை இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முக்கியமான தருணத்தில் அவுட்டாகமல் இருந்திருந்தால் இந்தியா தொடரை 2-1 என கைப்பற்றியே இருக்கும்.
மிகப்பெரிய விபத்திலிருந்து மீண்டுவந்து இந்திய அணிக்காக தொடர்ந்து தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் வழங்கிவரும் பண்டுக்கு இந்த தோல்வி இன்னொரு சோதனையாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “வாழ்க்கை என்பது பருவங்களின் தொடர். ஒருமுறை நீங்கள் கீழே விழும்போது, மீண்டும் உங்களின் வளர்ச்சி சுழற்சிமுறையில் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீழ்வதையும் ஏற்றுக்கொள்ளுங்கள், அவை உங்களை உயரத்திற்கு கொண்டுசெல்வதற்கு தயார்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்ற வரிகளை பகிர்ந்துள்ளார்.