ஹர்திக் பாண்டியா pt web
கிரிக்கெட்

குஜராத் அணியில் இருந்து ரூ.100 கோடி கொடுத்து வாங்கப்பட்டாரா ஹர்திக் பாண்டியா? - வெளியான புதிய தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியால் 100 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Angeshwar G

2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வீரர்களின் வர்த்தகமானது சூடுபிடிக்கத்தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கு தேவையான வீரர்களுக்கு போட்டிப்போட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் இறங்கியது. ஐபிஎல் ஏலம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே ஹர்திக்கின் பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரூ15 கோடி விலை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளையும் ஆட்டம் காண வைத்தது.

ஹர்திக் - ரோகித்

இந்த சூடு தணிவதற்குள் ஹர்திக் பாண்டியா எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஹர்திக் வருகையைக் கொண்டாடிய ரசிகர்கள், ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப்பக்கங்களை மும்பை ரசிகர்கள் வேகமாக அன் ஃபாலோ செய்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் பந்துவீச்சாளர் பும்ராவும், ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்ட சமயத்தில் பதிவிட்ட பதிவுகள், அவர்களது அதிருப்தியின் வெளிப்பாடு என சொல்லப்பட்டது. இது போன்ற சூழலில் ஹர்திக் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது.

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது குறித்து ஹர்திக் பாண்டியா X தளத்தில் பதிவு

2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் ஹர்திக் பாண்டியா. 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர், முதல் ஆண்டிலேயே குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். 2023 ஆம் ஆண்டும் இறுதிப் போட்டி வரை முன்னேற்றினார். இந்நிலையில் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் வர்த்தகம் செய்யப்படும் போது அவரது சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டே வர்த்தகம் நடைபெறும். அந்த வகையில் ரூ. 15 கோடிக்கு ஹர்திக் பாண்டியா வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படும் நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா

குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை பெற மும்பை அணி ரூ.100 கோடி வழங்கியுள்ளதாக யூகங்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பணப்பரிமாற்ற கட்டணத்தின் தொகை துல்லியமாக தெரியவில்லை என்றாலும் தரவுகளின் அடிப்படையில் இது கூறப்படுகிறது. ஆனால் வெளியிடப்படாமல் இருக்கும் தகவல்கள் ஐபிஎல் நிர்வாகத்திற்கு மட்டுமே தெரியும் என கூறப்படுகிறது.