2021, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை தொடர்ந்து, இந்திய அணி 2025 WTC இறுதிப்போட்டிக்கும் நிச்சயம் முன்னேறிவிடும், இந்தமுறை இந்திய அணி கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, சொந்த மண்ணில் பறிகொடுத்திருக்கும் இந்தியா, WTC இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. மீதமிருக்கும் 5 போட்டிகளில் நிச்சயம் 4 போட்டிகளில் வென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்விகளுக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் அணுகுமுறை மீது மிகப்பெரிய விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. அதன்விளைவாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் இணைந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருடன் சுமார் 6 மணி நேரமாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 6 மணி நேர உரையாடலில், பும்ரா 3வது போட்டியில் டிராப் செய்யப்பட்டது, வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிமுறை, அடுத்த கேப்டனை கம்பீர் எப்படி தயார் செய்யப் போகிறார்? யாரை கேப்டனாக தேர்வு செய்ய உள்ளார்? மூன்று விதமான அணிகளுக்கு மூன்று கேப்டன் என்ற அணுகுமுறை சரிவருமா? உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருவேளை இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று இறுதிப்போட்டிக்கு செல்லாத பட்சத்தில், டெஸ்ட் அணிக்கான தலைமை பொறுப்பிலிருந்து கவுதம் கம்பீர் நீக்கப்படுவார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
WTC இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே பல அணிகளுக்கு கனவாக இருக்கும் நிலையில், இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இந்தமுறை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக வென்று இறுதிப்போட்டியை சீல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் 0-3 என ஒயிட்வாஷ் ஆனநிலையில், இந்தியா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சரிந்து, இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு மற்ற அணிகளை சார்ந்து இருக்கவேண்டிய சூழலுக்கு சென்றுள்ளது. மற்ற அணிகளை சார்ந்து இல்லாமல் நேரடியாக செல்ல ஆஸ்திரேலியாவை 4-0 அல்லது 5-0 என வெல்ல வேண்டும். ஒருவேளை மற்ற அணிகளை சார்ந்து செல்லவேண்டுமானால் முடிந்தது 2 போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும். இரண்டு போட்டியில் வெல்லாத பட்சத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு குட்பை சொல்லவேண்டிய இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கவுதம் கம்பீர் தலைமையில் இலங்கைக்கு சென்று ஒருநாள் தொடரை இழந்தது, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது என பல மோசமான சாதனைகளை படைத்திருக்கும் பட்சத்தில், அவரின் அணுகுமுறை மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது.
இதற்கிடையில், ஒருவேளை இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாத சூழல் ஏற்பட்டால், கவுதம் கம்பீர் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு வெறும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மட்டும் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கம்பீருக்கு மாற்று பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஸ்மன் டெஸ்ட் அணிக்கு தேர்வுசெய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பின் பெரிய மாற்றம் நிகழும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.