இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான இருதரப்பு தொடரிலும் விளையாடாமல் இருந்துவருகின்றன. அரசியல் காரணங்களால் இருதரப்புக்கும் இடையே போட்டி நடத்தப்படாமல் இருந்துவருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012-13 இருதரப்பு தொடரில் விளையாடின. அதன்பிறகு இரு நாடுகளும் ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தொடரில் மட்டுமே நேருக்கு நேர் மோதிவருகின்றன. இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு சென்று இருதரப்பு தொடரில் விளையாடியது.
இந்நிலையில் கடந்த 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்தப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் முறையில் இலங்கை, யுஏஇ-ல் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் பாகிஸ்தானில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இம்முறையும் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
2025-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இத்தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ, கடந்த வாரம் உறுதியாக தெரிவித்தது. இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில் ”இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்யும் என்றும், இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், எப்போதும் உங்கள் கோரிக்கைகளுக்கு இசைந்து கொண்டே இருக்க மாட்டோம்” என லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி கூறினார்.
இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் போட்டிகளை நடத்த ஹைப்ரிட் மாடலை பின்பற்றுமாறு பிசிபியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கேட்டுக் கொண்டுள்ளது. பிசிபி இந்த நிபந்தைனைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், போட்டி முழுவதுமாக தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்படும்” என்று கூறப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ் டாக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐசிசி தொடர்களின் அட்டவணை பொதுவாக 100 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் வர மறுப்பதற்கு விளக்கம் கேட்டு பாகிஸ்தான் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.