Rachin Ravindra X
கிரிக்கெட்

க்ரீன் வரிசையில் ரச்சினை தூக்க திட்டம்.. இந்த 2 பவுலர்களுக்கு குறி! கோப்பைக்கு தயாராகும் RCB!

RCB அணியின் பெரிய பிரச்னையாக இருந்துவரும் ஆல்ரவுண்டர்கள் மற்றும் டெத் பவுலர்கள் கவலையை தீர்க்கும் முனைப்பில் இறங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம்.

Rishan Vengai

கடந்த 16 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இருந்துவரும் பிரச்னை என்றால் அது ஆல்ரவுண்டர்கள் மற்றும் டெத் பவுலர்கள் இல்லாத குறைதான். பலம் வாய்ந்த பேட்டிங் லைன்அப்-களை பலமுறை வைத்திருந்தபோதும் கூட அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

2008-ஆம் ஆண்டு முதல் 16 ஐபிஎல் சீசன்களில் விளையாடியிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், விராட் கோலி, டிவில்லியர்ஸ், க்றிஸ் கெய்ல் போன்ற பல ஸ்டார் வீரர்கள் இருந்தும் கூட கோப்பையை வெல்லமுடியாமல் ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறது. தோனியின் கேப்டன்சியில் மட்டும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிரோபி என இரண்டு கோப்பைகளை மட்டுமே வென்றிருக்கும் விராட் கோலி, ஒருமுறை கூட கேப்டனாக ஐசிசி கோப்பையையோ அல்லது ஐபிஎல் கோப்பையையோ வென்றதில்லை. இந்தமுறையாவது கோப்பையை வெல்லவேண்டும் என களமிறங்கவிருக்கும் டூபிளெசி தலைமையிலான ஆர்சிபி அணி, இதற்கு முன் இருந்த அத்தனை குறைகளையும் களையும் முனைப்பில் இறங்கியுள்ளது.

இதுவரை 16 ஐபிஎல் பதிப்புகளில் பங்கேற்றுள்ள RCB, 8 முறை பிளேஆஃப் சுற்றுக்கும், 3 முறை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. 2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும் ஆர்சிபி அணியால் கோப்பை வெல்லமுடியவில்லை.

க்ரீனை தொடர்ந்து ரச்சினுக்கு குறிவைக்கும் RCB!

RCB அணியின் பிரதான பிரச்னை என்றால் அது மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள்தான். அந்தவகையில் யாரும் எதிர்பாராத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து ரூ.17கோடி கொடுத்து கேம்ரூன் க்ரீனை விலைக்கு வாங்கியுள்ளது ஆர்சிபி அணி. அதேபோல நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்டாண்ட் அவுட் பிளேயராக இருந்த ரச்சின் ரவீந்திரா, ஆர்சிபி செல்லலாம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Rachin

பெங்களூருவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்த பிளேயர் என்பதால் ரச்சின் ரவிந்திராவிற்கும் ஆர்சிபி அணி விருப்பமான அணியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் கலக்கிவரும் ரச்சின் ரவீந்திராவிற்கு, செல்லக்கூடிய அணிகள் நிறைய உள்ளன. பென் ஸ்டோக்ஸை வெளியிட்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரச்சினை விலைக்கு வாங்கும் எண்ணத்தில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனைத்தையும் தாண்டி ஆர்சிபி அணி ரச்சினை கைப்பற்றினால், இந்த ஐபிஎல் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடிய தொடராக அமையும். அதேபோல டிராவிஸ் ஹெட்டுக்கும் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

2 வேகப்பந்துவீச்சாளருக்கு குறிவைக்கும் ஆர்சிபி!

கடந்த ஐபிஎல் சீசன்களில் தங்களுடைய ப்ரைம் பவுலர்களாக செயல்பட்ட, ஜோஸ் ஹசல்வுட், ஹர்சல் பட்டேல், ஹசரங்கா போன்ற 3 பந்துவீச்சாளர்களையும் வெளியிட்டுள்ளது ஆர்சிபி அணி. இதன்மூலம் அவர்கள் ஒரு தரமான வேகப்பந்துவீச்சாளருக்கு மட்டும் குறிவைத்து கடைசிவரை செல்வார்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் க்ரீனை எடுத்தது போக இன்னும் 23 கோடி மீதமுள்ளது. இந்நிலையில் ஏலத்தில் 2 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆர்சிபி அணி செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மிட்செல் ஸ்டார்க்:

தங்களுடைய முன்னாள் ஆர்சிபி பவுலரான மிட்செல் ஸ்டார்க்கை மீண்டும் அணிக்குள் எடுத்துவர ஆர்சிபி அணி ஆர்வம் காட்டும். அவர் ஆர்சிபி அணியில் பங்கேற்ற 2015-ஆம் ஆண்டு 20 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அப்போது ஆர்சிபி அணி 3-வது அணியாக டேபிளில் முடித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஃபார்முடன் கோப்பையை வென்றிருக்கும் அவர், ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுவரை அவரை 5 ஐபிஎல் அணிகள் அணுகியுள்ளதாக கிறிக்பஸ் செய்திவெளியிட்டுள்ளது.

Mitchell Starc

முகமது சிராஜுடன் ஒரு சிறந்த புதிய பந்து ஸ்பெல்லை வைத்திருக்கும் ஆர்சிபி அணி, ஒருவேளை மிட்செல் ஸ்டார்க்கை எடுத்துவந்தால் அவர்களுடைய டெத் பவுலிங் வேறுவிதமாக மாறும். இரண்டு வீரர்களின் கலவை என்பது அவர்களின் கோப்பை கனவிற்கு பெரிய உந்துததலாக மாறும்.

ஜெரால்ட் கோட்ஸி:

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ராவிற்கு அடுத்தப்படியான சராசரியை வைத்துள்ளார். தன்னுடைய திறமையால் ஒரு சிறப்பான உலகக்கோப்பையை வைத்திருக்கும் கோட்ஸிக்கு ஆர்சிபி செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களுடைய ஒரே வெளிநாட்டு சீமரான ரீஸ் டோப்லி அதிகம் காயமடையக்கூடியவர் என்பதால் கோட்ஸிக்கு செல்ல ஆர்சிபியின் திட்டம் இருக்கும்.

gerald coetzee

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்துமுடிந்த SA T20 தொடரில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்பது ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய கோட்ஸி, அவ்வணியை புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உதவினார். இவருக்கு செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆர்வம் காட்டும் என்பதால் இவருக்கான ஏலமும் சிறப்பானதாக இருக்கும்.