ஜடேஜா - அஸ்வின் cricinfo
கிரிக்கெட்

IND vs BAN|தரமான கம்பேக் கொடுத்த 'இந்திரன்-சந்திரன்'.. சதமடித்து அஸ்வின் மிரட்டல்! ரசிகர்கள் ஹேப்பி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றாக விளையாடும் ரவி(இந்திரன்) ஜடேஜா மற்றும் ரவி(சந்திரன்) அஸ்வின் இருவரும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அஸ்வின் அபாரமாக சதமடித்து மிரட்டியுள்ளார்.

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

சென்னை ஸ்டேடியம்

இந்தியா பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

இந்திய டாப் ஆர்டர்களை திணறடித்த ஹசன்!

நீண்ட இடைவெளிக்கு பின் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில், காயத்திலிருந்து மீண்டுவந்திருக்கும் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தன்னுடைய அபாரமான பந்துவீச்சுமூலம் அதிர்ச்சியளித்த வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத், அடுத்தடுத்து ரோகித் சர்மா (6 ரன்கள்), சுப்மன் கில் (0 ரன்), விராட் கோலி (6 ரன்கள்) மூன்று டாப் ஆர்டர் வீரர்களையும் வெளியேற்றி மிரட்டிவிட்டார்.

Hasan Mahmud

34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தனர். 9 பவுண்டரிகளை விரட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெஸ்வால் அரைசதமடித்து அசத்த, 6 பவுண்டரிகள் அடித்து 39 ரன்களில் இருந்த ரிஷப் பண்ட்டை மீண்டும் வெளியேற்றி கம்பேக் கொடுத்தார் ஹசன் மஹ்மூத்.

ஜெய்ஸ்வால்

உடன் ஜெய்ஸ்வால் 56 ரன்கள், கேஎல் ராகுல் 16 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற மீண்டும் 144/6 என்ற இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டது இந்திய அணி.

ஆட்டம் காட்டிய இந்திரன் - சந்திரன் கூட்டணி!

6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், 7வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த இரண்டு சென்னை பாய்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

ஜடேஜா

ஒருபுறம் அஸ்வின் சொந்த மண்ணை பயன்படுத்தி அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக விரட்ட, முதலில் நிதானமாக ஸ்டார்ட் செய்த சிஎஸ்கே வீரரான ரவீந்திர ஜடேஜா, அதற்கு பிறகு அதிரடியான ஆட்டத்திற்கு திரும்பி மிரளவைத்தார்.

அஸ்வின் - ஜடேஜா

மீசை வச்சவன் ரவி(இந்திரன்)- மீசை வைக்காதவன் ரவி(சந்திரன்)” என்ற ஜடேஜா கூற்றுக்கு ஏற்ப, இந்தியாவின் ஸ்பின் சகோதரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அஸ்வின்

10 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விரட்டியிருக்கும் ஜடேஜா 83 ரன்களில் விளையாடிவரும் நிலையில், 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து மிரட்டலாக விளையாடிய அஸ்வின் தன்னுடைய 6வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிவருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் அடித்துள்ளது.