aswin twitter
கிரிக்கெட்

IND Vs NZ Semi Final: சூர்யகுமாருக்குப் பதிலாக அஸ்வின்.. 6 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா?

நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியில் அஸ்வினிக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இத்தொடரில் அரையிறுதியில் விளையாட இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இதில் இந்தியா - நியூசிலாந்து ஆகிய அணிகள் நாளை (நவ.15) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் மும்பையில் மோத இருக்கின்றன. இதைத் தொடர்ந்து மறுநாள் (நவ. 16) தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. இந்நான்கு அணிகளில் வெற்றிபெறும் 2 அணிகள், இறுதிப்போட்டியில் மோதும்.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால், நாளைய போட்டி இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா 9 லீக் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், வீரர்கள் மனதிடத்துடன் நாளைய போட்டியை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில்தான் அஸ்வினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்தில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகம் இருப்பதாலும், வான்கடே மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக அஸ்வின் களம் இறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: "என் கண்களை என்னாலேயே நம்ப முடியல" - 6 பந்துகளில் 6 விக்கெட்... அசத்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்!

கடந்த லீக் ஆட்டங்களில் இந்தியா 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய நிலையில், நாளைய போட்டியில் இந்தியா 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசை நீண்டது என்பதால், கூடுதல் பந்துவீச்சாளர் இருந்தால் அது அணிக்கு பலமாக இருக்கும் என திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ravichandran Ashwin

ரவிச்சந்திர அஸ்வின், கடந்த நவம்பர் 8ஆம் தேதி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் களமிறக்கப்பட்டார். முன்னதாக, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ம.பி.: "தரகரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசும் மத்திய அமைச்சர் மகன்"- ராகுல் குற்றச்சாட்டு