ravi shastri-ashwin PTI
கிரிக்கெட்

‘எப்பொழுதும் சக ஊழியர்கள் தான் இருப்பார்கள்; நண்பர்கள் அல்ல’ - அஸ்வினுக்கு ரவி சாஸ்திரி பதிலடி

''இப்போது சக ஊழியர்கள் போன்று, அதாவது உடன் வேலை பார்க்கும் ஒருவரைப் போல மற்ற வீரர்களுடன் பழகி வருகிறார்கள்.''

சங்கீதா

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாததது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். டி.என்.பி.எல்லில் இதுவரை நடைபெற்ற 3 லீக் போட்டியில் மூன்றிலும் வெற்றிபெற்ற திண்டுக்கல் அணி, கோவை அணிக்கு எதிராக சேலத்தில் இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு சமீபத்தில் அஸ்வின் அளித்தப் பேட்டியில், இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் குறித்து பேசியிருந்தார். அதில், “எல்லோருமே சக ஊழியர்களாக இருக்கும் காலம் இது. ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடும் போது, அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால், இப்போது சக ஊழியர்கள் போன்று, அதாவது உடன் வேலை பார்க்கும் ஒருவரைப் போல மற்ற வீரர்களுடன் பழகி வருகிறார்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது; என்னவெனில், வீரர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும், நமது வலது அல்லது இடது பக்கம் அமர்ந்திருக்கும் மற்றொரு நபரை விட முன்னேறவும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில், கிரிக்கெட்டை பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போதுதான் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றொரு நபரின் நுட்பத்தையும் மற்றொரு நபரின் பயணத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளும்போது அது சிறப்பாகிறது” என்று தெரிவித்திருந்தார்.

அஸ்வின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘தி வீக்’ பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “என்னைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போதுமே சக ஊழியர்கள்தான். சக ஊழியர்களாக இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருப்பார்கள். அதாவது யாரிடமாவது உங்களது வாழ்க்கையில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று போய்க் கேட்டால், 4-5 பேர் என்றுதான் சொல்வார்கள். என் வாழ்க்கையில் 5 நெருங்கிய நண்பர்களுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அதற்கு மேல் நான் விரும்பவில்லை. அதாவது நான் சொல்வது என்னவென்றால், பணிபுரியும் இடத்தில் எப்பொழுதும் சக ஊழியர்கள் தான் இருப்பார்கள். வர்ணனையாளர்கள் அறையிலும் என்னுடன் சக ஊழியர்கள் தான் இருக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.