rohit sharma - pat cummins web
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவா? இந்தியாவா?.. ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2024-2025 பார்டர் கவாஸ்கர் டிரோபி டெஸ்ட் தொடரில் எந்த அணி வெல்லப்போகிறது என்ற கருத்தானது முன்னாள் வீரர்களுக்கு இடையே சூடானதாக மாறியுள்ளது.

Rishan Vengai

இலங்கைக்கு எதிராக ஏமாற்றமளிக்கும் ODI தொடருக்குப் பிறகு, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடினமான டெஸ்ட் அட்டவணைக்குத் தயாராக உள்ளது. புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர், அவரின் தலைமையிலான முதல் ஒருநாள் தொடரை 0-2 என இலங்கையிடம் இழந்ததற்கு பிறகு எதிர்வரும் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும் என்ற பெரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

rohit - kohli

அதன்படி இந்திய அணி அடுத்த 3 மாதங்களில் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. 10 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 3 தொடர்களில் 5 போட்டிகள் உள்நாட்டிலும், 5 போட்டிகள் வெளிநாட்டிலும் நடைபெற உள்ளன. அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்த எதிர்ப்பார்ப்பானது தற்போதே விவாதமாக மாறியுள்ளது.

Australia vs England Ashes

2024-ல் இந்தியா விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடர்கள்:

* இந்தியா vs வங்கதேசம் - 2 டெஸ்ட் போட்டிகள் - செப்டம்பர் 19 - அக். 01

* இந்தியா vs நியூசிலாந்து - 3 டெஸ்ட் போட்டிகள் - அக். 16 - நவம்பர் 05

* ஆஸ்திரேலியா vs இந்தியா - 5 டெஸ்ட் போட்டிகள் - நவம்பர் 22 - ஜனவரி 07

3-1 என ஆஸ்திரேலியா இந்தியாவை பழிதீர்க்கும்..

2014-ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியா அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. 4 டெஸ்ட் தொடர்களில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 2-1 (2016-2017), 2-1 (2018-2019), 2-1 (2020-2021), 2-1 (2022-2023) என இந்தியாவிற்கு எதிராக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அதில் 2018, 2020 டெஸ்ட் தொடர்களை சொந்தமண்ணில் இந்தியாவிற்கு எதிராக இழந்துள்ளது ஆஸ்திரேலியா.

ind vs aus

இந்நிலையில் நடப்பாண்டு டெஸ்ட் தொடரை வென்று இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருந்துவருகிறது. 2024-2025 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான வெற்றிக்கணிப்பு குறித்து பேசியிருக்கும் ரிக்கி பாண்டிங், இந்தமுறை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தும் என கூறியுள்ளார்.

வெற்றிக்கணிப்பு குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங், “இது ஒரு கடுமையான போட்டித் தொடராக இருக்கும், கடந்த இரண்டு முறையும் சொந்தமண்ணில் இந்தியாவிற்கு எதிராக தோற்றதால் எங்களுக்கு பழிதீர்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகவும் அமைந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலம், இந்தமுறை நான் ஆஸ்திரேலியாவை விட்டுக்கொடுக்க போவதில்லை, 3-1 என இந்தியாவை வீழ்த்தும் என நம்புகிறேன்” என்று ஐசிசி-இடம் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த சாஸ்திரி!

ரிக்கி பாண்டிங்கின் கருத்திற்கு ரியாக்ட் செய்திருக்கும் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி ஹாட்ரிக் அடிக்கும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐசிசி இடம் பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, “கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களில் ஆஸ்திரேலியாவை இந்தியா இரண்டு முறை தோற்கடித்துள்ளதால், ஒரு தசாப்த தோல்விக்காக பழிவாங்க ஆஸ்திரேலியா தீவிரமாக களமிறங்கும். அவர்கள் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள். அதனால் ஒரு ஹெவிவெயிட் டெஸ்ட் தொடரை பார்க்க எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

india test team

ஆனால் இந்தியா அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிடாது, இந்தியாவிற்கு ஹாட்ரிக் அடிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில் இந்தியாவிடம் சிறப்பான பந்துவீச்சாளர்களை உள்ளனர். ஒருவேளை இந்தியாவால் நன்றாக பேட் செய்யவும் முடிந்தால், இந்தியாவால் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவை வெல்ல முடியும்” என்று பேசியுள்ளார்.