தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் சிறந்த ஃபினிசர்களாக இந்திய அணியை நீண்ட காலம் வழிநடத்தியுள்ளனர். ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் என இரண்டிலும் அவர்களுடைய தனிப்பட்ட திறன் மற்றும் பார்ட்னர்ஷிப் என இரண்டையும் வைத்து தனித்துவமாக போட்டியை முடித்துவைப்பதில் 2 பேரும் வல்லவர்கள். பல போட்டிகளை இந்த கூட்டணி வெற்றிகரமாக வென்று கொடுத்துள்ளது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும்போது கடைசிவரை போராடி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லும் இந்திய வீரர்கள், தோனி மற்றும் யுவராஜ் சிங்கிற்கு பிறகு பெரிதாக கிடைக்காமல் போய்விட்டனர்.
ஹர்திக் பாண்டியா ஃபினிசராக பார்க்கப்பட்டாலும், அவர் அந்தளவு நிறைய போட்டிகளை வென்று கொடுக்கவில்லை. மேலும் காயம் காரணமாக அவரால் அதிக போட்டிகளில் விளையாடவும் முடியவில்லை.
இந்நிலையில் தோனி மற்றும் யுவராஜ் சிங்கிற்கு பிறகு ஒரு சிறந்த ஃபினிசருக்கான அத்தனை தகுதியோடும் வந்து சேர்ந்துள்ளார் ரின்கு சிங். இவரால் நிதானமாகவும், அதேநேரம் அதிரடியாகவும் விளையாடமுடிகிறது. பெரிய ஷாட்களை அடிக்கும் அதேவேளையில், ஸ்லிப்பில் தட்டிவிட்டு பவுண்டரிகளை எடுக்கும் க்ளவர் ஷாட்களையும் கைவசம் வைத்திருக்கிறார். அடுத்த தலைமுறைக்கான வீரராகும் அனைத்து தகுதிகளையும் ரின்கு சிங் வைத்துள்ளார்.
இந்நிலையில் ரின்கு சிங் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
ரின்கு சிங் குறித்து ஸ்போர்ட்ஸ் டாக் உடன் பேசியிருக்கும் குர்பாஸ், “ரின்கு ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமில்லாமல், ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவரிடம் இருக்கும் ஸ்பெசல் குவாலிட்டி என்றால், மற்றவீரர்கள் அவரிடத்தில் இறங்கும்போது அடிக்க முயல்கிறார்கள், ஆனால் அவர் மட்டும் பந்தை பார்த்து விளையாடுகிறார். அவர் ஒரு புத்திசாலி கிரிக்கெட் வீரர், அவரால் விரைவாகவே கண்டிசனை புரிந்துகொள்ளமுடிகிறது. ரின்குவால் இந்தியாவுக்கு அடுத்த ஃபினிஷராக இருக்க முடியும், அதேவேளையில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகவும் இருப்பார்” என்று குர்பாஸ் கூறினார்.
தோனி மற்றும் யுவராஜ் சிங் இந்திய அணிக்கு செய்ததை போன்று ரின்குவால் செய்யமுடியும் என்று கூறிய அவர், “நிச்சயமாக, அவரால் முடியும். இப்போது அவர் ஆடிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் நம்பமுடியாதது. இந்திய அணியில் அவரது சமீபத்திய ஆட்டத்தை நீங்கள் பார்த்தால், எந்தவொரு அணிக்கு எதிராகவும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். இது அவர் கிரிக்கெட் விளையாடுவதில் எவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. மேலும் “அணியில் வெறுமனே வந்துவிட்டு வெளியே செல்ல நான் வரவில்லை, நான் ஏதோஒன்றை பெரியதாக செய்யவே இங்கு இருக்கிறேன்” என்ற பசியானது அவரிடம் அதிகமாக இருக்கிறது. எப்போதும் கடினமாக உழைக்கிறார், அதுதான் அவரிடம் இருக்கும் சிறப்பான விசயம்” என்று குர்பாஸ் புகழ்ந்து பேசினார்.