rachin - sachin Twitter
கிரிக்கெட்

23 வயதில் குவியும் சாதனைகள்! ஒரே போட்டியில் 2 World Record! சச்சின் சாதனையை மீண்டும் உடைத்த ரச்சின்!

Rishan Vengai

நடப்பு உலகக்கோப்பையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த வீரர் என்றால் அது நியூசிலாந்தின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா தான். 23 வயதில் சச்சினின் உலக சாதனைகளை தொடர்ந்து உடைத்துவரும் ரச்சின், இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் மீண்டும் ஒரு உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

2வது முறையாக சச்சினின் உலக சாதனையை உடைத்த ரச்சின்!

ஏற்கனவே 24 வயதுக்குள் அதிக உலகக்கோப்பை சதங்கள் அடித்திருந்த சச்சினின் உலக சாதனையை முறியடித்து அசத்தியிருந்தார் நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா. 22 வயதில் 2 உலகக்கோப்பை சதங்களை அடித்திருந்த சச்சின் சாதனையை பின்னுக்கு தள்ளி, நடப்பு உலகக்கோப்பையில் 23 வயதில் 3 உலகக்கோப்பை சதங்களை பதிவு செய்து அசத்தினார் ரச்சின். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 9வது லீக் போட்டியில் மீண்டும் ஒரு சச்சின் உலக சாதனையை முறியடித்துள்ளார் ரச்சின்.

Rachin

இலங்கை அணிக்கு எதிராக 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என அதிரடி காட்டிய ரச்சின் 34 பந்துகளில் 42 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன் மூலம் 25 வயதுக்குள் அதிக உலகக்கோப்பை ரன்கள் அடித்த சச்சினின் உலக சாதனையை முறியடித்தார்.

Sachin

1996 உலகக்கோப்பையில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 22 வயதில் 523 ரன்கள் அடித்திருந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் 565 ரன்கள் அடித்திருக்கும் ரச்சின் ரவிந்திரா சச்சினின் உலக சாதனையை முறியடித்துள்ளார். அந்த வரிசையில் 474 உலகக்கோப்பை ரன்களுடன் பாபர் அசாமும், 372 ரன்களுடன் டி வில்லியர்ஸும் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

பேர்ஸ்டோவின் உலக சாதனையையும் முறியடித்தார் ரச்சின்!

அறிமுக உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மற்றொரு உலக சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார் ரச்சின் ரவிந்திரா. இந்த சாதனையை கடந்த 2019 உலகக்கோப்பையில் 532 ரன்கள் அடித்து இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ படைத்திருந்தார்.

Bairstow

இந்நிலையில் இன்றைய போட்டியில் 565 ரன்கள் அடித்த ரச்சின், பேர்ஸ்டோ படைத்த உலக சாதனயை முறியடித்து அறிமுக உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரராக மாறி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடப்பு உலகக்கோப்பையில் அதிகரன்கள் அடித்த வீரராகவும் மாறி அசத்தியுள்ளார்.

நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து இலங்கையை வீழ்த்தியுள்ளது. 9 போட்டிகளில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ள நியூசிலாந்து அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக் கோட்டிற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.