2024 டி20 உலகக்கோப்பையானது வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. டி20 உலகக்கோப்பையின் 9வது பதிப்பான இந்த உலகக்கோப்பை இரண்டாவது முறையாக வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவிருக்கிறது. முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2010 டி20 உலகக்கோப்பையை தான் இங்கிலாந்து அணி முதல் முறையாக வென்றிருந்தது.
இந்நிலையில்தான் 2024 உலகக்கோப்பையை குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிரன் பொல்லார்டை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனவும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 எனவும் தோற்று வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் 2023 வருடத்தில் ஒருநாள் தொடர், டி20 தொடர் என எந்தவொரு தொடரையும் இங்கிலாந்து அணி வெல்லவில்லை. இந்த சமயத்தில் தான் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையில், சொந்த மண்ணின் ஆடுகளத்தை புரிந்துகொள்ள பொல்லார்டை துணைபயிற்சியாளராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையின் படி, “முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கிரன் பொல்லார்டு, அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து ஆடவர் பயிற்சிக் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக உள்ளூர் நிலைமைகளின் நிபுணத்துவத்தை வழங்கும் வகையில், டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து ஆடவர் அணியில் பொல்லார்டு துணைப் பயிற்சியாளராக இணைவார்” என ECB வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்டு, சமீபத்தில் ஐபிஎல் ஓய்வையும் அறிவித்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் குழுவில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 2012 டி20 உலகக் கோப்பை வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணியில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருந்துவரும் இங்கிலாந்து அணி, 2024 டி20 உலகக்கோப்பையையும் குறிவைத்துள்ளது.