13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது ஆஸ்திரேலியா.
முன்னதாக போட்டி நடந்துகொண்டிருந்தபோது பாகிஸ்தான் வீரர் ஒருவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழங்கினார்.
அப்போது சட்டென அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறக்கூடாது என்று தடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் ரசிகர், “போட்டியின்போது இந்திய ரசிகர்கள் பாரத் மாதா கி ஜே என்று கூறலாம்
ஆனால் நாங்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போலீஸ் “ ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்வது சரியானது. ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்பது தவறானது” என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர், “பாகிஸ்தான் அணியின் போட்டியை பார்க்கும்போது வேறு என்ன சொல்வது?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி போலீஸை வீடியோ எடுத்தார். அவருக்கு அருகில் இருந்த ரசிகர்களும் ஆதரவாக பேசினர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பாகிஸ்தான் ரசிகரை தடுத்த போலீஸ் அதிகாரியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நேற்று நடந்தது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்ச் என்பதால், ‘இதில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் சமயத்தில் நடந்ததுபோன்று எந்தவித உள்நோக்கமும் கிடையாது. நேற்றைய போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது. அதில் கலந்துகொண்ட பாகிஸ்தான் வீரர், தன் நாட்டு வீரரை சியர் அப் செய்யவே அப்படி சொல்லியிருக்கிறார்’ என்றும் கூறிவருகின்றனர்.
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்தியா வென்றபோது, அங்கிருந்த இந்திய ரசிகர்கள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று இறை நம்பிக்கை தொடர்பான உள்நோக்கத்தோடு கோஷமிட்டனர். மேலும், ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் முழங்கினர்.
இதற்கு வெகுஜென மக்களிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில், சரியானதுதான் என்று மத்திய அமைச்சர்கள் வரை வாதம் செய்தனர். சம்பவம் நடந்து ஒருவாரமே ஆன நிலையில், பாகிஸ்தான் அணி பங்கேற்ற போட்டியில் அதுவும் இந்திய வீரர்கள் இல்லாத இடத்தில் பாகிஸ்தான் ரசிகர், உற்சாகத்தில் முழங்கியதை போலீஸொருவர் தடுத்த சம்பவம் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறி, இந்த சம்பவத்திற்கு பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.