இந்தியா - பாகிஸ்தான் web
கிரிக்கெட்

”இந்திய அணி ஏன் பாகிஸ்தானில் விளையாட மறுக்கிறது?” - ஐசிசி இடம் விளக்கம் கேட்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்த நிலையில், ஐசிசி இடம் அதற்கான விளக்கத்தை பாகிஸ்தான் கோரியுள்ளது

Rishan Vengai

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான இருதரப்பு தொடரிலும் விளையாடாமல் இருந்துவருகின்றன. இருநாட்டிற்கும் இடையே இருக்கும் அரசியல் பதற்றம் காரணமாக இருநாட்டின் கிரிக்கெட் அணிகளும் இருதரப்பு தொடர்களில் இருந்து விலகியே இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொள்ளும் ஒரே இடமாக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களாக மட்டுமே இருந்துவருகின்றன.

விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்று கூறினாலும் இந்தியா போதுமானவரை பாகிஸ்தானிடம் இருந்து விலகியே இருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012-13 இருதரப்பு தொடரில் விளையாடின. அதன்பிறகு இரு நாடுகளும் ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தொடரில் மட்டுமே நேருக்கு நேர் மோதிவருகின்றன. இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு சென்று இருதரப்பு தொடரில் விளையாடியது.

ஆசியக்கோப்பையில் விளையாட மறுத்த பாகிஸ்தான்..

கடந்த ஆசியக்கோப்பை தொடர் கூட முதலில் பாகிஸ்தானில் நடத்துவதாகதான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து தொடரின் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு என பிரித்து நடத்தப்பட்டன. இந்தியாவின் போட்டிகள் முழுக்க இலங்கையில் உள்ள மைதானத்திலேயே நடத்தப்பட்டது.

பாகிஸ்தான்

இந்தியாவின் இந்த அணுகுமுறைக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது, இந்தியா ஆசியகோப்பையில் விளையாடாததால் பாகிஸ்தான் அணியும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்று இந்தியாவிற்கு வராது என எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றது.

இந்தியா

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிரோபி தொடரிலும் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மறுக்கும் இந்தியா..

2025-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இத்தொடரில் கலந்துகொள்ள அனைத்து உலக நாடுகளும் பாகிஸ்தான் செல்லும் நிலையில், இந்திய அணி மட்டும் பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாற்றுமுறையில் இந்தியாவின் போட்டிகள் மட்டும் யுஏஇ மற்றும் இலங்கையில் நடத்தப்படும் என கூறப்படும் நிலையில், ஐசிசி இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருந்துவருகிறது.

ind vs pak

இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு முன்னாள் வீரர்கள் இந்தியாவின் இந்த அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களையும், இந்தியா வரவில்லை என்றால் பாகிஸ்தான் தொடரை நடத்தவேண்டாம் எனவும், பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிரோபி தொடரிலிருந்து விலகலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான்

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முடியாது என மறுத்திருக்கும் இந்தியாவின் முடிவு குறித்து ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளதாக கிரிக்பஸ் செய்துவெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா வந்து விளையாட மறுப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பெரிதாக வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா வராத பட்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன செய்யவேண்டும் என பாகிஸ்தான் அரசிடம்கலந்து ஆலோசித்து முடிவுக்கு எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.