பதும் நிசாங்கா cricinfo
கிரிக்கெட்

”இத எதிர்ப்பார்க்கல”! ODI-ல் இரட்டை சதம் விளாசிய பதும் நிசாங்கா! முதல் இலங்கை வீரராக சாதனை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் இலங்கை வீரர் பதும் நிசாங்கா.

Rishan Vengai

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது இலங்கை அணி.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இரட்டை சதம் விளாசிய பதும் நிசாங்கா!

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா மற்றும் அவிஸ்கா பெர்னான்டோ இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் அடிக்க, முதல் விக்கெட்டுக்கே 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டது. 88 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு அவிஸ்கா வெளியேறினாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிசாங்கா சதமடித்து அசத்தினார்.

மறுமுனையில் சமரவிக்ரம பார்ட்னர்ஷிப் போட்டாலும் அதிக பந்துகளை எதிர்கொண்ட பதும் நிசாங்கா, சமரவிக்ரமாவை நிற்கவைத்துவிட்டு வானவேடிக்கை காட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் நாட் அவுட்டாக களத்தில் நின்ற பதும் நிசாங்கா, 139 பந்துகளில் 20 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என பறக்கவிட்டு 210 ரன்கள் குவித்து அசத்தினார். இதுவரை எந்த இலங்கை வீரரும் இரட்டை சதம் அடித்ததில்லை என்ற மோசமான சாதனையை உடைத்த பதும் நிசாங்கா, முதல் இலங்கை வீரராக இரட்டை சதமடித்து அசத்தினார். பதும் நிசாங்காவின் அசாத்தியமான பேட்டிங்கால் 381 ரன்களை குவித்தது இலங்கை அணி.

9 வெளிநாட்டு வீரர்களில் முதல் இலங்கை வீரராக சாதனை!

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை இரட்டை சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில், “சச்சின் டெண்டுல்கர் (200), ரோகித் சர்மா (264, 209, 208*), மார்டின் கப்டில் (237*), விரேந்தர் சேவாக் (219), க்றிஸ் கெய்ல் (215), இஷான் கிஷன் (210), சுப்மன் கில் (208), ஃபகர் சமான் (210*), க்ளென் மேக்ஸ்வெல் (201*)” முதலிய 9 வீரர்கள் இருந்த நிலையில், பட்டியலில் 10வது வீரராகவும் முதல் இலங்கை வீரராகவும் இணைந்துள்ளார் பதும் நிசாங்கா.

382 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடியவரும் ஆப்கானிஸ்தான் அணி 55 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது.