pat cummins - rishabh pant web
கிரிக்கெட்

“அழுத்தம் எங்களுக்கு புதிதல்ல.. பன்ட், கோலி, ரோகித் யார் இருந்தாலும்..”- கம்மின்ஸின் டாப் 5 பதில்கள்

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக இந்திய அணி குறித்து பேசியிருக்கும் பாட் கம்மின்ஸ், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட் மற்றும் பும்ரா குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

Rishan Vengai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரானது 5 போட்டிகளாக நடத்தப்பட உள்ள நிலையில், அதன்மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள ரோகித் தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது.

rishabh pant gabba test

கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர் மட்டுமில்லாமல், இந்தியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் வென்றுள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக 4 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-ம் ஆண்டுதான் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றிருந்தது.

ind vs aus

2018, 2021 என இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருக்கும் இந்தியா மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்க ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை.

அழுத்தம் எங்களுக்கு புதிதல்ல..

பாட் கம்மின்ஸ்

இந்நிலையில் இந்திய அணி உடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் உரையாடியிருக்கும் கம்மின்ஸ், இந்திய அணி குறித்தும் வீரர்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

1. 2014-க்கு பிறகு இந்தியாவிடம் வெற்றிபெறாதது எவ்வளவு அழுத்தமானதாக இருக்கும்?

- சொந்த மண்ணில் விளையாடும் போது நாட்டின் ஒவ்வொரு ரசிகரும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று அதிகமாகவே எதிர்ப்பார்க்கின்றனர். கடந்த இரண்டு தொடர்களில் தோல்வியடைந்திருப்பது, இந்த தொடரில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களுடைய வீரர்கள் ஒன்றாக சேர்ந்து அதனை வெல்ல முயற்சிப்போம், இப்படியான அழுத்தம் எங்களுக்கு புதிதல்ல பழக்கப்பட்டதுதான்.

2. நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் தோல்வி உங்களுக்கு சாதகமானதா?

- உண்மையில் அப்படி சொல்லிவிட முடியாது. நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது என்று நினைக்கிறேன், ஆனால் போட்டியில் என்ன நடக்கும் என்று நம்மால் கூற முடியாது.

3.முகமது ஷமி இல்லாதது எவ்வளவு சாதகம்..?

- முகமது ஷமி ஒரு சிறந்த பந்துவீச்சாளர், அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என நினைக்கிறேன். ஆனால் அவருக்கான மாற்றுபவுலர்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியும்.

ரோகித் - கோலி

4. கோலி மற்றும் ரோகித்தின் மோசமான பேட்டிங் உங்களுக்கு சாதகமா?

- விராட் கோலி மற்றும் ரோகித் இருவரும் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த வீரர்கள். நீங்கள் டெஸ்ட் போட்டியில் நீண்டகாலம் விளையாட போகிறீர்கள் என்றால் நல்ல ஃபார்ம். மோசமான ஃபார்ம் இரண்டையும் எதிர்கொள்வது இயல்பானது தான். எங்களை பொறுத்தவரை இந்திய பேட்டர்களை அமைதியாக வைத்திருப்பதே வேலை, போட்டியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

5. இந்தியாவின் காப்பானாக பண்ட் இருக்கிறார்.. அவருக்கான திட்டம் என்ன?

- ரிஷப் பண்ட் போட்டியின் முடிவை விரைவாகவே மாற்றக்கூடிய வீரராக இருக்கக்கூடியவர். கடந்தமுறை எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளார். அவருக்கான திட்டங்களை தயாராகவே வைத்துள்ளோம்.

rishabh pant

6. WTC புள்ளிகள் அழுத்தத்தை கொடுக்கிறதா?

- எங்களுக்கு இன்னும் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டு தொடர்கள் மீதமிருக்கின்றன. WTC புள்ளிகள் எப்போதும் உத்வேகத்தை கொடுக்கின்றன. எங்களுடைய கடைசி 2 தொடரில் என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.