பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி ப்ரூக் முச்சதமும் அடித்து அசத்த 823 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி அறிமுக வீரர் கம்ரான் குலாமின் அதிரடியான சதத்தால் 366 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னரான சஜித் கானின் (7 விக்கெட்டுகள்) அபாரமான பந்துவீச்சால் பெரிய டோட்டலை குவிக்க முடியாமல் 291 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இங்கிலாந்து அணி 291 ரன்களுக்கு அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணி 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்தமுறை இங்கிலாந்து ஸ்பின்னர்களான பஷீர் மற்றும் ஜாக் லீச் இருவரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 7வது வீரராக களமிறங்கிய ஆல் ரவுண்டர் ஆகா சல்மான் 63 ரன்கள் அடிக்க 221 ரன்களை சேர்த்தது பாகிஸ்தான் அணி.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் ஸ்பின்னர்களான சஜித் கான் மற்றும் நோமன் அலியின் அபாரமான பந்துவீச்சால் ரன்களை குவிக்க திணறியது.
தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் 3, 0 என வெள்யேற, அடுத்த வந்த வீரர்கள் ஒருவர் கூட பெரிய ரன்களை சேர்க்கவில்லை. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களை சேர்த்தார். அபாரமாக பந்துவீசி 16.3 ஓவரில் 46 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நோமன் அலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை 144 ரன்களுக்கு சுருட்டினார்.
சஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் சேர்ந்து 20 விக்கெட்டுகளை கைப்பற்ற 155 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நோமன் அலி 11 விக்கெட்டுகள், சஜித் கான் 9 விக்கெட்டுகள் என வீழ்த்தி 20 விக்கெட்டுகளையும் இருவர் மட்டுமே தட்டிச்சென்றனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் இதே முல்தான் மைதானத்தில் 823 ரன்களை குவித்த இங்கிலாந்து அணிக்கு, இந்த பாகிஸ்தான் ஸ்பின் ஜோடி சுழற்பந்துவீச்சில் தரமான பதிலடி கொடுத்தது. சிறப்பாக செயல்பட்ட சஜித் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972-க்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு பவுலர்கள் மட்டுமே சேர்ந்து 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை. அதுமட்டுமில்லாமல் 1987-க்கு பிறகு இரண்டு பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் இருவரும் ஒரே போட்டியில் ஐந்து-ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றுவது இதுவே முதல்முறை.
பாகிஸ்தான் இந்த ஸ்பின் அட்டாக்கிற்கு எதிராக இங்கிலாந்து அணியால் எதுவும் செய்யமுடியவில்லை, பாகிஸ்தான் அணி மீது எழுந்த அனைத்து விமர்சனங்களுக்கும், பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி முதலிய ஸ்டார் வீரர்களை பெஞ்சில் அமரவைத்து கூட எங்களால் வெற்றிபெற முடியும் என பாகிஸ்தான் அணி தங்கள் வீரர்களின் திறமையை நிரூபித்து காட்டியுள்ளது.