sajid khan web
கிரிக்கெட்

எங்கயா பதுக்கி வச்சிருந்தீங்க| 200, 300 ரன்கள் குவித்த ரூட்-ப்ரூக் ஸ்டம்புகளை தகர்த்த PAK ஸ்பின்னர்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வலுவான வீரர்கள் 3 பேரின் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்த பாகிஸ்தான் பவுலர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், முதலில் விளையாடி 556 ரன்களை பாகிஸ்தான் குவித்தபோதும், இங்கிலாந்து அணி ஜோ ரூட் (262 ரன்கள்) மற்றும் ஹாரி ப்ரூக் (317 ரன்கள்) அபாரமான ஆட்டத்தால் 823 ரன்களை குவித்தது.

அதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்து தோற்பது வரலாற்றில் முதல் முறையாக பதிவுசெய்யப்பட்டது.

ரூட் - ப்ரூக்

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து, “பாபர் அசாம், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி” முதலிய வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மாற்று வீரர்களாக அறிமுக வீரர்களான ஹசீபுல்லா, மெஹ்ரான் மும்தாஜ், கம்ரான் குலாம் மூன்று பேருடன், வேகப்பந்து வீச்சாளர் முகமது அலி மற்றும் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

சதமடித்து அசத்திய அறிமுக வீரர் கம்ரான் குலாம்..

பாபர் அசாமுக்கு மாற்றுவீரராக களமிறங்கிய 29 வயதான கம்ரான் குலாம், அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 224 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 118 ரன்கள் குவித்தார். குலாமின் அசத்தலான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது பாகிஸ்தான் அணி.

கம்ரான் குலாம்

பாகிஸ்தானை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார். 50 ரன்கள், 50 ரன்கள் என பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிய இங்கிலாந்து அணி 211/2 என்ற வலுவான நிலையில் விளையாடி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

14 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகள்.. தலைகீழாக திருப்பிய சஜித்!

129 பந்துகளை மட்டுமே சந்தித்து 16 பவுண்டரிகளுடன் 114 ரன்களை குவித்த பென் டக்கெட் இங்கிலாந்தை மற்றொரு பெரிய ரன்குவிப்புக்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் இருந்தார். ஆனால் சரியான நேரத்தில் பந்துவீச வந்த ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான், ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார்.

சதமடித்த டக்கெட்டை 114 ரன்னில் பெவிலியன் அனுப்பிய சஜித் கான், கடந்த போட்டியில் இரட்டை சதம், முச்சதம் என மாஸ் காட்டிய ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரது ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்தார். உடன் பென் ஸ்டோக்ஸும் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப 225 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஜித்கான் போப், ரூட் மற்றும் ப்ரூக் என மூன்று இங்கிலாந்து வலுவான வீரர்களின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்து இணையத்தை அதிரச்செய்தார். இரண்டாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்துள்ளது.