Pak vs SA Cricinfo
கிரிக்கெட்

271ரன் இலக்கு! 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்ரிக்கா! அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்குமா பாகிஸ்தான்

Rishan Vengai

நடப்பு உலகக்கோப்பை தொடரில் கடைசி 3 போட்டிகளில் வரிசையாக தோல்வியை சந்தித்திருக்கும் பாகிஸ்தான் அணி, 5 போட்டிகளில் 2-ல் மட்டும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் நீடிக்கிறது. நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றிபெற்றதை அடுத்து மேலும் ஒரு இடம் கீழிறங்கியுள்ளது பாகிஸ்தான். அரையிறுதிக்கான ரேஸ்ஸில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளும் தீவிரம் காட்டுவதால் அடுத்தடுத்த போட்டிகளில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளது பாகிஸ்தான் அணி.

நல்ல தொடக்கம் பெற்றும் சொதப்பிய வீரர்கள்!

இன்று சென்னையில் தொடங்கிய தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட் செய்தது. தொடர் தோல்வியிலிருந்து மீளாத பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர்கள் இந்த போட்டியிலும் சுமாரான தொடக்கத்தையே கொடுத்தனர். 38 ரன்களில் ஓப்பனர்களை இழந்த பாகிஸ்தான் அணி தடுமாற, அதற்கு பிறகு கைக்கோர்த்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Babar Azam

இருவரும் நிலைத்து நின்று விளையாட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர், இந்த உலகக்கோப்பையில் தன்னுடைய 3வது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த ரிஸ்வான் 31 ரன்னில் அவுட்டாகி வெளியேறி, தென்னாப்பிரிக்காவிற்கு வழிவிட்டார். அதற்கு பிறகு பந்துவீச வந்த லெக் ஸ்பின்னர் ஷாம்சி ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார். பாபர் அசாமை 50 ரன்னில் வெளியேற்றி ஷாம்சி, அதற்கு பிறகு சிறப்பாக விளையாடிய இஃப்திகாரையும் 21 ரன்னில் வெளியேற்றினார்.

141 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாற “ஒருவேளை இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அவ்வளவுதானோ” என தோன்ற, 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாவுத் ஷக்கீல் மற்றும் ஷதாப் கான் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடி ஷக்கீல் அரைசதம் அடிக்க, மறுமுனையில் ஷதாப் கான் சிக்சர்களாக பறக்கவிட 200 ரன்களை கடந்தது பாகிஸ்தான். ஆனால் மீண்டும் பந்துவீச வந்த ஷம்சி நல்லதொடக்கம் பெற்று 52 ரன்னில் இருந்த ஷக்கீலை அவுட்டாக்கி வெளியேற்றினார். உடன் ஷதாப் கானும் 43 ரன்னில் வெளியேற 300 ரன்களை எட்டும் பாகிஸ்தானின் கனவு தகர்ந்தது. இறுதியில் போராடிய முகமது நவாஸ் 2 சிக்சர்களை விரட்டி 21 ரன்கள் அடிக்க, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர் ஷாம்சி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சேஸிங்கில் நெதர்லாந்திடம் தோற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அந்த 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்திருந்த தென்னாப்பிரிக்கா, இலக்கை துரத்திய போட்டியில் தான் தோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில் சேஸிங்கில் தடுமாற்றமடையும் தென்னாப்பிரிக்காவை சரியாக வலைக்குள் சிக்கவைத்து பாகிஸ்தான் வெற்றிபெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Shaheen Afridi

271 ரன்களை நோக்கி விளையாடிவரு தென்னாப்பிரிக்கா அணி 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களில் விளையாடிவருகிறது. டிகாக் 24 ரன்களில் வெளியேறினார். கேப்டன் பவுமா 28, டஸ்ஸன் 21 ரன்னில் வெளியேறினர். க்ளாசன் 12 ரன்னில் நடையைக் கட்டினார். டேவிட் மில்லர், மார்கரம் இருவரும் விளையாடி வருகின்றனர்.