pakistan cricket web
கிரிக்கெட்

கடந்த 100ஆண்டில் இல்லாத படுதோல்வி.. ஜிம்பாப்வே உடன் இணைந்த பாகிஸ்தான்! 5 மோசமான சாதனைகள்!

சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், பாகிஸ்தான் அணி பல மோசமான சாதனை பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி, 2-0 என பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்த விதம், அந்த அணியில் எவ்வளவு பிரச்னை இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

pak vs ban

முதல் போட்டியில், 448/6 என்ற வலுவான நிலையிலிருந்து சொந்த மண்ணில் ஆடும் ஒரு அணி டிக்ளார் செய்தது என்றால், அது நிச்சயம் வெற்றியைதான் சென்று முடிவடையும். ஆனால் முதல் இன்னிங்ஸில் டிக்ளார் செய்த பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

pak vs ban

முதல் போட்டியில் தான் அப்படியென்றால் இரண்டாவது போட்டியில், அபாரமான பந்துவீச்சால் 26/6 என்ற நிலையில் வங்கதேசத்தை திணறடித்த பாகிஸ்தான், அதற்குபிறகு ரன்களை எளிதாக விட்டுக்கொடுத்து அவ்வணியை 262 ரன்கள் எடுக்க வழிவிட்டது. முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியையும் கோட்டைவிட்டது.

இதன் விளைவாக பல்வேறு மோசமான சாதனைகளை தங்களின் பெயரில் எழுதியுள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் படைத்திருக்கும் மோசமான சாதனைகள்..

1303 நாட்கள்: சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கடந்த 1303 நாட்களாக ஒருபோட்டியில் கூட வெற்றிபெறமுடியாமல் படுதோல்விகளை சந்தித்துவருகிறது பாகிஸ்தான்.

100ஆண்டு: கடந்த 100ஆண்டில் வரிசையாக 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறாத முழு உறுப்பினர்கள் கொண்ட அணியாக பாகிஸ்தான் மோசமான சாதனை படைத்துள்ளது. இந்தப்பட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசத்துடன் தங்களை இணைத்துள்ளது.

கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 தோல்வி 1 டிரா, இங்கிலாந்துக்கு எதிராக 3 தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக 2 தோல்வி, வங்கதேசத்துக்கு எதிராக 2 தோல்வி என பதிவுசெய்துள்ளது.

இரண்டாவது அணி: ஒரு டெஸ்ட் அணியில் குறைந்தது 10 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட ஒரு அணி, சொந்த மண்ணில் தோல்வியை தழுவுவது வங்கதேசத்துக்கு பிறகு இதுவே இரண்டாவது முறை.

முதல் அணி: WTC புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி, முதல் அணியாக குவாலிஃபிகேசனிலிருந்து வெளியேறும் அணி என்ற நிலையை அடைந்துள்ளது.

pak vs ban

முதல் தோல்வி: வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியை இழந்தது மட்டுமில்லாமல், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் இழந்து பரிதாபத்திற்குரிய நிலைக்கு சென்றுள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியில் வீரர்களிடம் ஒற்றுமை இல்லை எனக்கூறப்படும் நிலையில், இவ்வளவு மோசமான விளைவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சந்தித்துவருகிறது. ஒற்றுமையுடன் இல்லாத வீரர்களிடம் கடுமையாக வாரியம் நடந்துகொள்ள வேண்டும் என முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.