mohammad rizwan twitter
கிரிக்கெட்

அவ்ளோ வெகுளியா நீங்க! பேட்டரிடமே ரிவ்யூ கேட்ட முகமது ரிஸ்வான்.. கலாய்க்கும் ரசிகர்கள்! வைரல் வீடியோ!

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் செய்த செயல், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

கிரிக்கெட் என்றாலே விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. அதிலும் தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரும் பேட்டருமான முகமது ரிஸ்வான் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், நேற்று (அக்.31) 31வது லீக் போட்டியில், பாகிஸ்தானும் வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்தின.

pak vs ban teams

இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 45.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 32.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியதுடன், புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கும் முன்னேறியது. அதேநேரத்தில் அடுத்தடுத்து 6 தோல்விகளைச் சந்தித்த வங்கதேசம், அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைய முடியாமல் நடப்புத் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.

இதையும் படிக்க: ’நவம்பர் 12.. ப்ளைட் ரெடி’ - கோலியைக் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்தியா பதிலடி!

முன்னதாக வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. அப்போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி 43வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை, வங்கதேச பேட்டர் டஸ்கின் அகமது எதிர்கொண்டார். பந்து அவரது காலில் இருந்த பேடில் உரசிச் சென்றது. அந்தப் பந்தை விக்கெட் கீப்பர் ரிஸ்வான் கேட்ச் பிடித்தார். உடனே, பந்துவீச்சாளர் அஃப்ரிடி நடுவரிடம் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் கேட்டார். ஆனால், நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். இதையடுத்து, கீப்பரான ரிஸ்வான், ’பந்து பேட்டில் படவில்லை; ரிவ்யூ கேட்கலாம்’ என கேப்டன் பாபர் அசாமிடமும் அஃப்ரிடியிடமும் முறையிட்டார்.

அவர்கள் இருவரும் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் ரிஸ்வான் ரிவ்யூ கவுண்டவுன் ஓடிக் கொண்டிருக்கும்போதே பேட்டர் டஸ்கின் அகமதுவிடம், ’பந்து பேட்டில் பட்டதா’ எனக் கேட்டார். அதற்கு டஸ்கின் பதில் அளித்தவுடன், பாபரிடம், ’பார்த்தியா.. நான் சொல்வது சரி’ என்பதுபோல கூறினார். இதை சற்றும் எதிர்பாராத பாபர் அசாம், ரிவ்யூ கேட்காமல் நிராகரித்தார். பொதுவாக ரிவ்யூ கவுண்டவுன் முடிந்தவுடன்தான் பேட்டரிடம் பேட்டில் பட்டதா இல்லையா என்பது குறித்த சந்தேகத்தை எதிரணியினர் கேட்பார்கள். ஆனால் ரிஸ்வான், கவுண்டவுன் ஓடிக்கொண்டிருக்கும்போதே கேட்டதை, நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு எதிரணி பேட்ஸ்மன் இடம் கேட்டால் அவர் எப்படி உண்மையை சொல்வார். அவர் சொல்வதை கேட்டு முடிவெடுக்கிறாரே என நகைப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மராத்தா இடஒதுக்கீடு: பற்றி எரியும் மகாராஷ்டிரா.. MLA, MPக்கள் ராஜினாமா.. ஆளும் அரசுக்கு சிக்கலா?