இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரடு (100 பந்துகள்) கிரிக்கெட் தொடரானது 2021-ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 4வது சீசன் நடத்தப்பட்டது. இந்த தொடரில் ஒரு அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மொத்தம் 100 பந்துகள் மட்டுமே கொடுக்கப்படும்.
கடந்த ஜுலை 23-ம் தேதி தொடங்கப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான தி ஹண்ட்ரடு ஆண்கள் லீக் போட்டியானது ஆகஸ்டு 18ம் தேதியான நேற்று இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது.
பரபரப்பாக நடைபெற்ற தி ஹண்ட்ரடு 2024 லீக் போட்டியில்,
ஓவல் இன்விசிபிள்ஸ்,
பர்மிங்காம் பீனிக்ஸ்,
சதர்ன் பிரேவ்,
நார்தென் சூப்பர்சார்ஜர்ஸ்,
டிரெண்ட் ராக்கெட்ஸ்,
வெல்ஸ் ஃபையர்,
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ்,
லண்டன் ஸ்பிரிட்
முதலிய 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக செயல்பட்ட ஓவல் இன்விசிபிள்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் இறுதிப்போட்டியை எட்டின.
தி ஹண்ட்ரடு 2024 லீக் தொடரின் இறுதிப்போட்டியானது ஆகஸ்டு 18ம் தேதியான நேற்று ஓவல் இன்விசிபிள்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஓவல் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான இன்விசிபிள்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் 147 ரன்களை அடித்தது. அதிகப்படியாக வில் ஜாக்ஸ் 37 ரன்களை விளாசினார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய சதர்ன் பிரேவ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் டேவிஸ் மற்றும் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 43 பந்துகளுக்கு 58 ரன்கள் என்ற சிறப்பான தொடக்கத்துடன் சென்ற சதர்ன் அணிக்கு அலெக்ஸ் டேவிஸை போல்டாக்கி வெளியேற்றிய ஆடம் ஷாம்பா முதல் விக்கெட்டை எடுத்துவந்தார். உடன் ஜேம்ஸ் வின்ஸும் வில்ஜேக்ஸ் பந்தில் போல்டாகி வெளியேற, அடுத்து பந்துவீச வந்த சாகிப் மஹ்மூத் சதர்ன் பிரேவ் அணியை எழவே விடாமல் அடிக்குமேல் அடிகொடுத்தார்.
இதையும் படிக்க: 3 ஐசிசி கோப்பை.. 50 ODI சதம்.. தலைசிறந்த TEST கேப்டன்! 16 ஆண்டுகள் நிறைவு செய்த கோலியின் சாதனைகள்!
வீசிய 20 பந்துகளில் 12 பந்துகளை டாட்பந்துகளாக வீசிய சாகிப் மஹ்மூத், லியோஸ் டூ ப்ளூயை 20 ரன்களிலும், எவன்ஸை 4 ரன்னிலும், கிரன் பொல்லார்டை 0 ரன்னிலும் வெளியேற்றி ஓவல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில் இறுதிப்போட்டியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஓவல் இன்விசிபிள்ஸ் அணி, தொடர்ச்சியாக இரண்டாவது பட்டத்தை தட்டிச்சென்றது.
அவ்வணி 2023 டைட்டிலையும் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.