India Cricket Team File Image
கிரிக்கெட்

ரோகித், கோலி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா இல்லை - ஆசிய விளையாட்டு போட்டிக்கு பிசிசிஐயின் திட்டம் என்ன?

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகும் நிலையில் இரண்டாம் பட்ச வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

Justindurai S

சீனாவில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2014-இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா பங்கேற்கவில்லை. அதன் பின் பல்வேறு காரணங்களால் கிரிக்கெட் சேர்க்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இம்முறை இந்திய கிரிக்கெட் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளன.

Shikhar Dhawan

ஆனால், வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க உள்ளதால் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இதில் ஓய்வு தரப்பட்டு இந்திய இரண்டாம்தர அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் கூடிய அணியை அத்தொடரில் களமிறக்குவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதில் ரின்கு சிங், ஜிதேஷ் ஷர்மா மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்திய பெண்கள் அணியை பொறுத்தவரையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான முதல் தர அணியையே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதிக்குள் பங்கேற்கும் அணி வீரர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், அடுத்த சில நாள்களில் அணி அறிவிக்கப்படலாம்.