2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி, அழுத்தமான நேரத்தில் தன்னுடைய ஸ்டெடியான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றார்.
மிடில் ஆர்டர் வீரராகவும், ஆல்ரவுண்டராகவும் மிளிர்ந்த நிதிஷ் ரெட்டி 142 ஸ்டிரைக்ரேட் மற்றும் 33 சராசரியுடன் 303 ரன்களை அடித்து அசத்தினார். அதன் தொடர்ச்சியாக 2024 ஐபிஎல் தொடரின் வளர்ந்துவரும் வீரர் விருதை நிதிஷ் ரெட்டி தட்டிசென்றார்.
அதனைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு பிறகான ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம்பிடித்த நிதிஷ் குமார், கடைசிநேரத்தில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.
ஐபிஎல் தொடரில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் மிளிர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்கும் வகையில் உயர்ந்துள்ள நிதிஷ் குமார், தன்னுடைய வாய்ப்பு குறித்து பேசியுள்ளார்.
NDTV உடனான ஒரு உரையாடலில் பேசியிருக்கும் நிதிஷ், “என்னை ஓப்பன் செய்யச் சொன்னால் நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், டாப் ஆர்டரில் எனக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் கிடைக்கும் இடத்திற்கு நான் என்னை மாற்றியமைக்க வேண்டும், அதை உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தே செயல்படுத்துவதில் நான் கவனம் செலுத்திவருகிறேன்.
எனக்கு பேட்டிங் பொசிஷன் நம்பர் 7 அல்லது நம்பர் 6-ல் விளையாட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் ஹர்திக் பாண்டியா ரோலில் நான் விளையாடுவேன் என நினைக்கிறேன். நான் எங்கு கேட்டாலும் பேட்டிங் செய்ய மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா ரோலில் விளையாட தயாராகி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
விராட் கோலியை ரோல் மாடலாக கொண்டிருக்கும் நிதிஷ்குமார் ரெட்டி விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.