ind vs nz pt web
கிரிக்கெட்

36 ஆண்டுகால சோதனைக்கு முற்றுப்புள்ளி.. நியூசி அபார வெற்றி! வெற்றியை சாத்தியமாக்கிக் கொடுத்த மூவர்!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று, 36 ஆண்டுகால தொடர் தோல்விக்கு முடிவு கட்டியுள்ளது.

Angeshwar G

இந்தியா vs நியூசிலாந்து

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்களில் சுருண்ட நிலையில், நியூஸிலாந்து 402 ரன்கள் குவித்தது. 356 ரன்கள் பின்தங்கி நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்தியா, நிதானத்துடன் ரன் குவிப்பில் ஈடுபட்டது. சர்ஃப்ராஸ் கான் 150 ரன்களும், ரிஷப் பண்ட் 99 ரன்களும் எடுக்க இந்திய அணி 462 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்த போதும், வில் யங், ரச்சின் ரவிந்திரா நிதானமாக விளையாடி இலக்கை எட்டினர். அதன்படி, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.

1988 ஆம் ஆண்டுக்கு பிறகு நியூஸிலாந்து அணி, இந்திய மண்ணில், இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இந்த தோல்வியின் காரணமாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறைவான இலக்கே நெருக்கடி

இரண்டாவது இன்னிங்ஸில் டாம் லேதம் மற்றும் கான்வேவை அதிவேகமாக வெளியேற்றி பும்ரா இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றார். ஆனால், குறைவான இலக்கு பும்ராவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, யங் மற்றும் ரச்சினின் நிலையான ஆட்டம் இந்திய அணிக்கே தலைவலியாக அமைந்தது.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், சர்ஃபராஸ் மற்றும் பந்தின் விக்கெட் விழுந்த பின் இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்தது. எப்படியெனில், இந்தியா தனது இறுதி 7 விக்கெட்களை 54 ரன்களுக்குள் விட்டுக்கொடுத்தது.

நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. அது அவர்களுக்கு பெருமளவில் கை கொடுத்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் சௌதி, மேட் ஹென்றி, வில்லியம் ஓ’ரூர்க் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசி இந்திய அணியின் மொத்த விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும், மேற்கண்ட மூவரும் 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

முதல் வெற்றி அதிலும் வரலாற்று வெற்றி

இந்திய அணி அஷ்வின், குல்தீப், ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடம் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் இம்மூவரும் 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் இவர்களது பாட்சா பலிக்கவில்லை.

டாம் லாதம் நியூசிலாந்து அணியின் முழு நேர டெஸ்ட் கேப்னடாக பொறுப்பேற்றபின் பெற்ற முதல் வெற்றி என்பதும் அதிலும், வரலாற்று வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி புனேவில் நடைபெற உள்ளது.