pant - sarfaraz cricinfo
கிரிக்கெட்

சர்பராஸ்-பண்ட் வெறித்தனமான ஆட்டம்.. 462 ரன்கள் குவித்த இந்தியா! NZ-க்கு 107 ரன்கள் இலக்கு!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெல்ல நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதற்குபிறகு விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியான சதத்தால் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 35 ரன்னும், ரோகித் சர்மா 52 ரன்னும் அடித்து வெளியேற, அதற்குபிறகு களத்திற்கு வந்த விராட் கோலி 70 ரன்கள் அடித்து அசத்தினார்.

3வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் இந்தியா சேர்த்த நிலையில், சர்பராஸ் கான் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

150 ரன்கள் குவித்த சர்பராஸ்.. 99 ரன்னில் அவுட்டான பண்ட்!

போட்டியை சமன் செய்யும் விதத்திலாவது எடுத்துச்செல்ல வேண்டும் என்ற முயற்சியில் விளையாடிய ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4வது நாளின் இரண்டு செஸ்ஸன்களையும் ஆட்டிவைந்த இந்த ஜோடி ரன்வேட்டை நடத்தியது.

sarfaraz

சர்பராஸ் கான் 18 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். 150 ரன்கள் குவித்திருந்த நிலையில் சர்பராஸ் வெளியேற, சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 99 ரன்னில் துரதிருஷ்டவசமாக வெளியேறினார்.

நிலைத்துநின்று விளையாடிய இரண்டு வீரர்களும் வெளியேற அடுத்துவந்த எந்தவீரரும் நிலைத்து நிற்காததால் 462 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து வெற்றிபெற 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

pant

நாளை கடைசி நாள் என்பதால் இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒருநாள் முழுவதும் 107 ரன்களை டிஃபண்ட் செய்வது முடியாத காரியம் என்பதால், இந்தியா நியூசிலாந்தை ஆல் அவுட் செய்யவே முயற்சி செய்யவேண்டும். அதையும் மீறி இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மழைதான் வரவேண்டும்.