இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று 1-1 என சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் போட்டி தொடங்கியது.
ஆனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி மிகமோசமான நிலையில் பின்தங்கியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்ல இந்தியாவிற்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
359 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை அமைத்தார். ஆனால் 77 ரன்னில் ஜெய்ஸ்வால் வெளியேறிய பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
அபாரமாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் இந்திய அணியை எழவே விடாமல் விக்கெட் வேட்டை நடத்தினார். 6 விக்கெட்டுகளை சாண்ட்னர் வீழ்த்தி அசத்த 245 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது இந்தியா.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 2-0 என முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.
2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் இந்திய அணி, 18 தொடர் வெற்றிகளுக்கு பிறகு தோல்வியை தழுவியுள்ளது.