இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க 10 அணிகளும் போட்டிபோட்டு வருகின்றன. இந்த தொடரில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், கத்துக்குட்டி அணிகள்கூட, வலிமைமிக்க அணிகளைச் சாய்த்து வருகின்றன. அதன்படி, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 28வது லீக் போட்டியில் வங்கதேசமும் நெதர்லாந்தும் மோதின.
இதில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இவ்வணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீக்கெரன் ( paulvan meekeren). அந்தப் போட்டியில் 7.2 ஓவர்கள் வீசி 23 ரன்களை மட்டுமே வழங்கிய 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இதனால், நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன், ஒரேநாளில் ரசிகர்கள் உலகம் முழுவதும் புகழும் அளவுக்கு உயர்ந்தார். தவிர, அன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதையடுத்து இணையங்களிலும் வைரலானார்.
2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் (2020-21) வரை கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் லட்சத்தைத் தாண்ட, மறுபுறம் பொருளாதாரப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம். அதற்காக, கிடைத்த வேலையைக்கூட பிடித்தமாதிரி செய்த பிரபலங்களும் பலர். அதில் ஒருவர்தான் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான பால் வான் மீக்கெரன். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் உச்சத்தில் இருந்தபோது, உணவு டெலிவரி வேலை செய்தார்.
கொரோனா காரணாமாக, அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரும் தள்ளி வைக்கப்பட்டது. ’கொரோனா இல்லாமல் போயிருந்தால் இன்று திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெறும்’ என இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ தளம் ட்வீட் செய்திருந்தது. அதனைப் பகிர்ந்த பால் வான், 'இந்நேரம் நான் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், எனது செலவுகளுக்காக நான் தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறேன்' என ஏக்கத்துடனும், உருக்கத்துடனும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவு அப்போதே, அதிகம் வைரலாகிய நிலையில், ரசிகர்கள் அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் கமெண்ட் செய்திருந்தனர். தற்போது அதை மீண்டும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.