Tnpl 2023 Facebook
கிரிக்கெட்

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி - இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நெல்லை ராயல் கிங்ஸ்

Justindurai S

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் (டிஎன்பிஎல்) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே லைக்கா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது.

TNPL 2023

டாஸ் வென்ற நெல்லை அணி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திண்டுக்கல் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் சோ்த்து 76 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பூபதி குமாா் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சோ்த்தது. நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினாா்.

பின்னா் நெல்லை இன்னிங்ஸில் இதர பேட்டா்கள் சற்று ரன்கள் சோ்த்து உதவ, குருசாமி அஜிதேஷ் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 73, ரித்திக் ஈஸ்வரன் 11 பந்துகளில் 6 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

TNPL 2023

பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்த போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்த ரித்திக் ஈஸ்வரன், நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கியப் பங்காற்றினார். கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டும்தான் தேவைப்பட்ட நிலையில் முதல் 5 பந்துகளில் 3 ரன்களை மட்டும்தான் அடிக்க முடிந்தது. கடைசி பந்தில் ஈஸ்வரன் சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெடுகள் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்திருந்த நெல்லை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவா்த்தி குறைந்த ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தாா்.

நாளை (ஜூலை 12) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது நெல்லை ராயல் கிங்ஸ்.