ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்த்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.
2018, 2021 என இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருக்கும் இந்தியா மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால், சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்க ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடக்கவிருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலக கிரிக்கெட்டே காத்திருக்கும் இந்த தொடரில் சுழற்பந்துவீச்சு சாம்பியன் பவுலர்களான நாதன் லயன் மற்றும் அஸ்வின் இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொள்ள இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை ஆஸ்திரேலியா கொண்டிருந்தாலும், இந்த இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் தங்களுடைய கைகளை கொண்டு எந்த ஆடுகளத்திலும் மாயாஜாலம் காட்டும் வித்தை தெரிந்தவர்கள் என்பதால் இவர்கள் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சு ஆதிக்கத்திற்கு இடையில் இந்த சாம்பியன் ஸ்பின் ஜோடி என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், அஸ்வின் விரைவாகவே கற்றுக்கொள்ள கூடிய பந்துவீச்சாளர் என புகழ்ந்துள்ளார்.
ஃபாக்ஸ் கிரிக்கெட் உடன் பேசியிருக்கும் நாதன் லயன், “அஸ்வின் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். எனது முழு வாழ்க்கையிலும் நான் அவருடன் நேருக்கு நேர் பலமுறை எதிர்கொண்டு விளையாடியிருக்கிறேன், அதில் அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு நம்பமுடியாத புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர், அவரால் எந்த ஆடுகளத்தின் தன்மையையும் மிக விரைவாக கற்றுக் கொள்ளவும், அதற்கேற்ப தன் பவுலிங்கை மாற்றியமைக்கவும் முடியும். உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களால் மட்டுமே இதை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.
மேலும் அஸ்வினை நேரில் பார்த்ததில் இருந்து தற்போதுவரை கற்றுக்கொண்ட விஷயங்களையும் நாதன் வெளிப்படுத்தினார், "அஸ்வின் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். நீங்கள் எதிர்த்து விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் உங்களின் சிறந்த பயிற்சியாளர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தியாவுக்கு எப்போது சென்றாலும் அவருடைய பல காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன், என்னால் எதையும் செய்ய முடியும் என அவர் எடுத்து செல்லும் விதம் அபாரமானது.
கிரிக்கெட்டை நான் பார்க்கும் விதம் என்னவென்றால், விளையாட்டை வென்ற யாரையும் நான் சந்தித்ததில்லை, விளையாட்டை வென்ற எவருக்கும் எதிராக விளையாடியதில்லை. இந்த சிறந்த விளையாட்டில் கற்றுக்கொள்ளவே நிறைய இருக்கிறது, அஸ்வினிடம் இருந்தும் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதற்காக அவர் மிகவும் பெருமைப்பட வேண்டும்” என்று பேசியுள்ளார்.