நடராஜன் pt web
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியம் போதுமான வாய்ப்புகளை அளிக்கிறதா? மதுரையில் நடராஜன் பேட்டி

PT WEB

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஷெரீப் பாய் பிரியாணி கடையின் 40வது கிளையை ஷெரீப் பாய் பிராண்ட் அம்பாசிடரும், இந்திய கிரிக்கெட் வீரருமான நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நடராஜன்

தொடர்ந்து கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. காயங்கள் காரணமாக சில போட்டிகளில் இடையில் பங்கேற்க முடியவில்லை. கிரிக்கெட்டில் அரசியல் எதும் நடைபெறவில்லை. கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பார்ப்பதில்லை.

கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களின் ஒத்துழைப்பால்தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக உருவாகி உள்ளேன். IPL கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன். IPL கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக TNPL போட்டி மாறி உள்ளது.

TNPL போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 கிரிக்கெட் வீரர்கள் உருவாகி உள்ளனர். TNPL கிரிக்கெட் போட்டியில் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. TNPL கிரிக்கெட் தொடக்கத்தை விட தற்போது முன்னேற்றம் அடைந்து உள்ளது,

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்க்கு பெற்றோர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள். அதனை இளைஞர்கள் மிஸ்யூஸ் செய்யக்கூடாது.

ஒரு விளையாட்டு வீரனுக்கு உடல்நலம்தான் மூலதனம். நான் தினமும் உடற்பயிற்சி செய்வேன். விளையாடினாலும், விளையாடவிட்டாலும் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளவது என்னுடைய பழக்கம்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ‘உங்களுக்கு பிடித்த உணவு எது?” என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு மட்டன் பிரியாணிதான் மிகவும் பிடிக்கும்” என்றார்.

தொடர்ந்து ‘நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா?’ என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மீடியா முன் பேசுவதற்கே தயக்கமாக உள்ளது. பின்னர் எப்படி சினிமாவில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை” என பேசினார்.