bazball vs indian spinners web
கிரிக்கெட்

“இந்தியாவால் இங்கிலாந்தின் “பாஸ்பால்” அட்டாக்கை தடுத்து நிறுத்த முடியாது”! - நாசர் ஹுசைன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது சவாலானதாக இருக்குமென்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர் என்பதால், அனைத்து தரப்பினரின் கவனத்தையும் இந்தத்தொடர் பெற்றுள்ளது. ஜனவரி 25ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 11-ம் தேதிவரை நடக்கவிருக்கும் போட்டிகளானது ஹைதராபாத், ராஜ்கோட், விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் தரம்சாலா மைதானங்களில் நடத்தப்படவிருக்கிறது.

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 4 குவாலிட்டி ஸ்பின்னர்களை இந்திய அணி அறிவித்துள்ளதால், ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து வீரர்கள் என்ன செய்யப்போகிறார்கள், அந்த அணியின் பாஸ்பால் அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

bazball

இந்நிலையில்தான் இங்கிலாந்தின் பாஸ்பால் அட்டாக்கை இந்தியாவால் எப்போதும் ஆஃப் செய்து வைக்கமுடியாது என்றும், இந்தத் தொடர் இரண்டு அணிக்கும் சவாலானதாக இருக்கப்போகிறது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பாஸ்பால் அட்டாக் இங்கிலாந்தின் வெற்றி மொழியாக இருந்துள்ளது!

இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கும் நாசர் ஹுசைன், “இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியே விருப்பமான அணியாக இருக்கிறது. இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்தின் “பாஸ்பால் அட்டாக்” எதிர்கொள்ளவிருக்கும் ஒவ்வொரு சவாலும், அவர்களுடைய துப்பாக்கிகளில் அவர்களே சிக்கிக்கொள்வது போலானது. எப்படியிருப்பினும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரின் பாஸ்பால் அணுகுமுறையானது இதுவரை இங்கிலாந்திற்கு வெற்றியின் பாஷையாகவே இருந்துவருகிறது. அதனால் நான் அவர்களை குறைத்து மதிப்பிடமாட்டேன். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பாஸ்பால் மிகவும் வெற்றிகரமாக இருந்துள்ளது. அதனால் அதிக நேரம் இந்தியாவால் பாஸ்பாலை தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட கடினமான இடம் இந்தியா என்பதால், இது இங்கிலாந்துக்கு நிச்சயம் பெரிய சவாலாக இருக்கும்” என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடன் ஹுசைன் கூறியுள்ளார்.

jadeja - ashwin

தொடர்ந்து பேசிய அவர், “இங்கிலாந்தின் இந்த புதிய அணுகுமுறை சொந்த மண்ணில் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை பார்க்க இந்தியா விரும்புகிறது. இது நிச்சயம் ஒரு கண்கவர் கிரிக்கெட்டாக இருக்கப்போகிறது. இரண்டு அணிகளும் எப்படி தங்களுடைய திட்டங்களில் செல்லப்போகின்றனர் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கப்போகிறது”என்று அவர் மேலும் கூறினார்.