Najmul Hossain Shanto pt web
கிரிக்கெட்

சென்னையில் எடுபடாத வங்கதேச பேட்டிங்.. காரணம் என்ன? மீண்டு வருவது எப்படி? கேப்டன் சொல்வதென்ன?

"நாங்கள் எங்கள் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில்லை" வங்கதேச அணியின் கேப்டன்..

Viyan

முதல் இன்னிங்ஸில் சரியாக பேட் செய்யவில்லை

வங்கதேச அணியின் பேட்டிங் பெருமளவு முன்னேற்றம் காணவேண்டும் என்று கூறியிருக்கிறார் அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அந்த அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இன்னிங்ஸில் வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அந்த அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களே எடுத்தது. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க அந்த அணி தவறிய நிலையில் அவர்களது பேட்டிங் முன்னேற்றம் காணவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஷான்டோ.

Najmul Hossain Shanto

தங்கள் அணியின் பேட்டிங் பற்றிப் பேசிய ஷான்டோ, "நாங்கள் முதல் இன்னிங்ஸில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அது இந்த ஆட்டத்தின் மிகமுக்கியத் தருணமாக இருந்தது. எங்கள் டாப் ஆர்டரில் ஒரு பார்ட்னர்ஷிப்பாவது சரியாக அமைந்திருந்தால் நாங்கள் நல்ல நிலையில் இருந்திருப்போம். நிச்சயம் டாப் ஆர்டருக்கு நன்றாக செயல்படவேண்டும் என்ற நெருக்கடி இருக்கும். அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில்.

பெரிய இன்னிங்ஸாக மாற்றுவது முக்கியம்

இனி நாங்கள் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் எங்கள் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில்லை" என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் இணைந்து வெறும் 33 ரன்களே எடுத்தனர். மிடில் ஆர்டர் ஓரளவு போராடினாலும் அவர்கள் யாராலும் அரைசதம் எடுக்க முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால், ஷான்டோ தவிர்த்து வேறு யாராலும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை.

ஷான்டோ

தங்கள் பேட்டிங் பற்றி மேலும் பேசிய ஷான்டோ, "நீங்கள் நல்லபடியாக இன்னிங்ஸை தொடங்கவேண்டும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. நீங்கள் ஒரு 20-30 பந்துகளை சமாளித்து ஆடிவிட்டால் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்ற ஐடியா கிடைத்துவிடும். அங்கிருந்து நீங்கள் அந்த இன்னிங்ஸைக் கட்டமைக்கவேண்டும். ஒரு 30 - 40 ரன்கள் எடுத்துவிட்டால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவேண்டும். அதை பாகிஸ்தானில் ஆங்காங்கே செய்தோம்.

நம்பிக்கை கொடுத்த தொடக்கம்

நாங்கள் பயிற்சியில் இதற்குத்தான் பெரிதாக உழைக்கிறோம். மார்ச்சில் இலங்கைக்கு எதிரான தொடரைப் பார்த்தீர்களெனில் அங்கு நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் இப்போது சிறு முன்னேற்றம் இருக்கிறது. இருந்தாலும் இன்னும் நன்கு விளையாடவேண்டும். உங்களால் 40 - 60 பந்துகள் ஆட முடிந்ததெனில், அங்கிருந்து உங்களால் 120 பந்துகள் வரை ஆட முயற்சிக்கவேண்டும். அதை செய்தால் உங்களால் ஒரு நல்ல ஸ்கோரோடு வெளியேறமுடியும்" என்றும் கூறினார்.

ஷத்மான் இஸ்லாம்

அதேசமயம் அந்த அணியின் பேட்டிங்கில் ஒரு பாசிடிவ் விஷயமும் நடந்தது. சுமார் 5 ஆண்டுகள் கழித்து அந்த அணியின் தொடக்க ஜோடி டெஸ்ட் அரங்கில் 50 ரன்களைக் கடந்தது. ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம் இருவரும் இணைந்து 62 ரன்கள் எடுத்தனர். அதுபற்றிப் பேசிய அந்த அணியின் கேப்டன், "ஆடுகளத்தில் அதிக நேரம் செலவளிப்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்தப் போட்டியில் அது நடக்கவில்லை. எங்கள் ஓப்பனர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது நல்ல விஷயம். அது அடுத்த டெஸ்ட்டுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கும்" என்று கூறினார்.

வங்கதேச அணியின் பேட்டிங் மட்டுமல்ல, கேப்டன் ஷான்டோவின் பேட்டிங்குமே சமீபமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதற்கு ஏற்ப அவர் முதல் இன்னிங்ஸில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவருடைய அணுகுமுறை மாறியிருந்தது. சற்று அதிரடியாக ஆடிய அவர், 8 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசினார். 55 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 127 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதுபற்றிப் பேசிய அவர், "இதுபோன்ற சூழ்நிலைகளில் நான் இப்படித்தான் விளையாடுவேன், இப்படித்தான் விளையாடவேண்டும் என்ற என்னுடைய திட்டத்திலும் நான் தெளிவாக இருந்தேன்" என்று கூறினார் ஷான்டோ.