முஷ்பிகுர் ரஹீம் cricinfo
கிரிக்கெட்

PAK vs BAN: 9 ரன்னில் தவறிப்போன இரட்டை சதம்.. 15,000 ரன்கள் குவித்து வரலாறு படைத்த முஷ்பிகுர் ரஹீம்!

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் 21-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

rizwan

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சாத் ஷகீல் 141 ரன்கள் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 171* ரன்கள் குவித்து மிரட்ட, 448 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி டிக்ளார் செய்தது. ரிஸ்வான் இரட்டை சதத்தை எட்ட 29 ரன்களே மீதமிருந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் டிக்ளார் செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

முஷ்பிகுர் ரஹீம்

எப்படியும் வங்கதேசத்தை சுருட்டிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட பாகிஸ்தான் அணி கேப்டனுக்கு ஷத்மன் இஸ்லாம் 93 ரன்கள், மொனிமுல் 50 ரன்கள், முஷ்பிகுர் ரஹீன் 191 ரன்கள், லிட்டன் தாஸ் 56 ரன்கள் மற்றும் மெஹிதி ஹாசன் 77 ரன்கள் என ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் மிரட்டிய வங்கதேச அணி 117 ரன்கள் முன்னிலையுடன் 565 ரன்கள் குவித்துள்ளது.

9 ரன்னில் தவறிப்போன இரட்டை சதம்!

இரண்டாவது பேட்டிங் செய்த வங்கதேச அணி 147 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளுடன் 300 ரன்கள் பின்தங்கியிருந்த போது முஷ்பிகுர் ரஹீன் பேட்டிங் செய்ய வந்தார். அங்கிருந்து அணியை தனியாளாக சுமந்த ரஹீம், பாகிஸ்தானின் எண்ணத்தை தவிடுபொடியாக்கினார்.

முஷ்பிகுர் ரஹீம்

தன்னுடைய 11வது டெஸ்ட் சதமடித்து 341 பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நின்ற ரஹீம், 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 191 ரன்கள் எடுத்திருந்த போது இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே சதமடித்த முஷ்பிகுர் ரஹீம், 5 வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் வங்கதேச வீரர் என்ற அரிதான சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

15000 ரன்கள் குவித்து வரலாறு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதமடித்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 15000 ரன்களை கடந்தார் முஷ்பிகுர் ரஹீம்.

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் 15000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முதலிடத்தில் 15192 ரன்களுடன் தமீம் இக்பால் இருக்கும் நிலையில், 15159 ரன்களுடன் முஷ்பிகுர் ரஹீம் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

117 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 5 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.