உலக கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாளர் என்ற வரிசையை எடுத்துக்கொண்டால் அதில் முதலிடத்தில் எழுதப்படுவது இவருடைய பெயராகத்தான் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகள், டி20 கிரிக்கெட்டில் 13 விக்கெட்டுகள் என ஒட்டுமொத்தமாக 1347 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் அந்த பந்துவீச்சாளரின் பெயர், முத்தையா முரளிதரன்.
தான் பந்துவீசிய காலகட்டத்தில் பல பேட்டிங் ஜாம்பவான்களுக்கு சிம்மசொப்பமானமாக விளங்கிய முரளிதரன், தான் சந்தித்ததிலேயே கடினமான பேட்ஸ்மேன் ஒரு இந்திய வீரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று SB கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட முரளிதரன், மாணவர்களின் பல கேள்விகளுக்கு நேர்மறையான பதில்களை பகிர்ந்துகொண்டார். அப்போது தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது ஒரு மாணவர் “நீங்கள் பந்துவீசியதிலேயே மிகக் கடினமான பேட்ஸ்மேன் யார்?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “நான் பந்துவீசியதிலேயே மிகவும் கடினமான பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக்-தான்” என்று கூறியுள்ளார். மேலும் தான் மிகவும் போற்றக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் என்றால், அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் “விவிஐ ரிச்சர்ட்ஸ்” என்று தெரிவித்துள்ளார்.
முரளிதரனும் தூஸ்ரா பந்துவீச்சும் என தனி காதல்கதையே எழுதலாம். அப்படி தன்னுடைய பந்துவீச்சில் தூஸ்ராவில் கலக்கிய முரளிதரன், தனக்கு தூஸ்ராவின் அடிப்படையை கற்றுக்கொடுத்தது முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் “சக்லைன் முஷ்டாக்” என்று நேர்மறையாக கூறியுள்ளார். தூஸ்ரா பந்துவீச்சில் கலக்கிய பவுலர்களில் முரளிதரன், ஹர்பஜன், ஜோஹன் போதா, சயத் அஜ்மல் போன்ற வீரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும், தூஸ்ராவின் முன்னோடி என்றால் அது சக்லைன் முஷ்டாக்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தூஸ்ரா பந்துவீச்சு குறித்து பேசியிருக்கும் முரளிதரன், “சக்லைன் முஷ்டாக்தான் எனக்கு 'தூஸ்ரா' பந்து வீசுவதற்கான அடிப்படைகளை கற்றுக் கொடுத்தார். தூஸ்ரா ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேனுக்கு கூட சவாலான பந்து வீச்சு. அதை துல்லியமாக கற்றுக்கொண்டு பந்துவீச எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆனது" என்று முரளிதரன் கூறியுள்ளார்.