2024 ரஞ்சிக் கோப்பை சாம்பியனான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை போட்டியானது லக்னோவில் நடைபெற்றது.
அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இரானி கோப்பையில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை எதிர்த்து முதலில் பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் (222* ரன்கள்) விளாசி அசத்தினார். இரானி கோப்பையில் இரட்டை சதமடிக்கும் முதல் மும்பைவீரர் என்ற சாதனையையும் படைத்தார். உடன் ரஹானே 97 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கள், தனுஷ் கோட்டியான் 64 ரன்கள் மற்றும் இறுதியாக வந்த ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் என அசத்தியதில் 537 ரன்களை மும்பை அணி குவித்தது. சர்பராஸ் கான் 222* ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பையின் அசத்தலான ரன்குவிப்பிற்கு பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ருதுராஜ் 9 ரன்கள், சாய் சுதர்சன் 32 ரன்கள், படிக்கல் 16 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் என அனைவரும் வெளியேறினாலும், மறுபக்கம் நிலைத்துநின்று விளையாடிய அபிமன்யூ ஈஸ்வரன் 16 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 191 ரன்கள் குவித்தார்.
அபிமன்யூவின் அசத்தலான ஆட்டத்தால் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி. அதற்குபிறகு விளையாடிய மும்பை அணிக்கு எதிராக தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரெஸ்ட் ஆஃப் இந்தியா பவுலர்கள் 171 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆனால் 8வது வீரராக களமிறங்கிய தனுஷ் கோட்டியான், மீண்டும் தன்னுடைய ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். 5-வது நாள் முடிவில் மும்பை 316/8 என்ற நிலையில் இருந்ததால் போட்டி சமனில் முடிந்தது.
இரானி கோப்பை போட்டி சமனில் முடிந்தபோதும் முதல் இன்னிங்ஸில் லீட் எடுத்ததால் மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் மும்பை 27 வருடங்களுக்கு பிறகு இரானி கோப்பையை வென்று அசத்தியது. அவர்கள் கடைசியாக 1997-1998 இரானி கோப்பையை வென்றிருந்தனர். இரட்டை சதமடித்த (222* ரன்கள்) சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோப்பையை மும்பை கேப்டன் அஜிங்கியா ரஹானே பெற்றுக்கொண்டார். ரஞ்சிக்கோப்பையை வென்றதற்கு பிறகு, இரானி கோப்பையும் வென்று தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வுக்கு முன் நல்ல மெமரிகளை பெற்றுவருகிறார் அஜிங்கியா ரஹானே.