IPL ஆக்‌ஷன் 2025 முகநூல்
கிரிக்கெட்

IPL Auction 2025: டி காக், இஷன், வதேரா... மும்பை இந்தியன்ஸ் அணி யாரையெல்லாம் டார்கெட் செய்யும்?

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, திலக் வர்மா ஆகியோரை மொத்தம் 75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறது.

Viyan

ஐபிஎல் ஜுரம் இப்போதே தொடங்கிவிட்டது. மெகா ஏலம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டதைத் தொடர்ந்து, 2025 சீசனுக்கான மெகா ஏலம் இந்த வாரம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் புதியதொரு டீமை உருவாக்க முயற்சி செய்வார்கள் என்பதால், இந்த ஏலத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, திலக் வர்மா ஆகியோரை மொத்தம் 75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறது. ஏலத்தில் வீரர்களை வாங்க அந்த அணிக்கு இன்னும் 45 கோடி மீதமிருக்கிறது. ஒரு RTM கார்ட் மீதமிருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு விளையாடிய 5 'கேப்ட்' வீரர்களை தக்கவைத்திருப்பதால், அந்த RTM கார்டை அவர்கள் 'அன்கேப்ட்' வீரருக்குத் தான் பயன்படுத்த முடியும்.

10 அணிகளில் குறைவான தொகையோடு இருக்கும் அணிகளில் ராஜஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மும்பை இந்தியன்ஸும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் தான். அதனால், அந்த அணி மிகவும் கவனமாகத்தான் ஏலத்தை எதிர்கொள்ளவேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய தேவைகளில் ஒன்று விக்கெட் கீப்பர். ஒரு ஓப்பனிங் ஸ்லாட்டும் காலியாக இருப்பதால், அவர்கள் ஓப்பனிங் ஆடக்கூடிய விக்கெட் கீப்பரை டார்கெட் செய்வார்கள். முன்னாள் வீரர் இஷன் கிஷனை வாங்குவதற்கு பெரிய தொகை செலவிடவேண்டியிருக்கும். அது பௌலிங்கை பலவீனப்படுத்தலாம் என்பதால், வெளிநாட்டு வீரர்களை வாங்குவது நல்லது. முன்னாள் வீரர் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் அவர்களுக்கு நல்ல தேர்வாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கும் சுமார் 6-7 கோடி வரை செலவளிக்கவேண்டியிருக்கலாம். இருந்தாலும், 14 போட்டிகளும் ஆடக்கூடிய ஒரு வீரரை வாங்குவது நல்லது. குறைவாக செலவளித்து அவர்கள் ஒழுங்காக ஆடாமல் போனால் அது சிக்கலாக அமையும்.

அந்த கீப்பரை வாங்கிவிட்டால் அவர்களின் டாப் 5 முழுவதும் செட் ஆகிவிடும். ஆறாவது இடத்துக்கு நேஹல் வதேராவை அவர்கள் வாங்க நினைக்கலாம். ஆனால், அதற்கு அவர்கள் மிகப் பெரிய செலவு செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த இடத்துக்கு அவர்கள் ஆல்ரவுண்டர் ஒருவரை வாங்குவது சரியாக இருக்கும். ஒருவேளை குருனால் பாண்டியா மீண்டும் மும்பைக்கு கம்பேக் கொடுக்கலாம் என்றுகூட எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அதிக தொகைக்குப் போகவில்லையெனில் மும்பை நிச்சயம் அவரை வாங்க நினைக்கும். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் நல்ல ஸ்பின்னர் இல்லாமல் பெரிய அளவுக்குத் தடுமாறியிருக்கிறார்கள். குருனால் அந்த ஓட்டையை ஓரளவுக்காவது அடைப்பார்.

அடுத்த இடத்துக்கு ஓரளவு பேட்டிங் செய்யக்கூடிய பௌலரை வாங்குவது அந்த அணிக்கு நல்லது. மார்கோ யான்சன், ஜெரால்ட் கோட்சியா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களோ, சேன்ட்னர், ஹசரங்கா போன்ற ஸ்பின்னர்களோ அவர்களுக்கு ஏற்ற வீரர்களாக அமைவார்கள்.

முந்தைய 3 இடங்களுக்கும் எப்படியும் அந்த அணி 15-17 கோடி வரை செலவளிக்க நேரிடலாம். மீதமிருக்கும் தொகையில் அவர்கள் ஒட்டுமொத்த அணியையும் கட்டமைக்கவேண்டும். அதனால் மிகப் பெரிய தொகைக்குப் போகும் பௌலர்களை வாங்குவது கடினம் தான். அதனால் டிரெண்ட் போல்ட் மீண்டும் அந்த அணிக்குச் செல்வாரா என்பது சந்தேகமே. புதிய மலிங்கா நுவான் துசாராவை மீண்டும் வாங்கக்கூடும். போக, ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அந்த அணிக்குத் தேவை. ஸ்விங் ஆகும் வான்கடேவுக்கு புவி போன்ற ஒரு சீனியர் வீரர் நல்ல ஆப்ஷனாக இருப்பார். வயதாவதால் கொஞ்சம் குறைந்த விலைக்கும் கூட கிடைக்கலாம். சமீபத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சரித்திரம் படைத்த அன்ஷுல் கம்போஜை அவர்கள் மறுபடியும் வாங்கலாம்.

போக, ஒரு இந்திய முன்னணி ஸ்பின்னரோ அல்லது வெளிநாட்டு ஸ்பின்னரோ நிச்சயம் அந்த அணியின் இலக்காக இருக்கும். வெளிநாட்டு ஸ்பின்னர்களுக்கு சில நல்ல ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆனால், ஓரளவு குறைவான தொகைக்குக் கிடைக்ககூடிய தரமான இந்திய ஸ்பின்னர் அவர்களுக்குக் கிடைப்பது கடினம்தான். அதனால், வெளிநாட்டு ஸ்பின்னரைத் தேர்ந்தெடுத்துவிடுவது நல்லது. ஜாம்பா, ஷம்ஸி, கேஷவ் மஹராஜ் போன்றவர்களை 3-4 கோடிகளில் வாங்கிட முடியும்.

மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை ஏலத்தில் அவர்கள் குறைவாக செலவளித்து எடுக்கும் ஒருசில அன்கேப்ட் வீரர்கள் அவர்களுக்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுப்பார்கள். அப்படியான ஒருசில வீரர்களை அவர்கள் நிச்சயம் இந்த முறையும் வாங்குவார்கள்.