ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்புதான் தற்போதுவரை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல்லில் விளையாடுவது குறித்து தோனியே, கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, இதுகுறித்து மெளனம் கலைத்தார். அப்போது அவர், “எனது கடைசி சில வருட கிரிக்கெட்டை முடிந்தளவு கொண்டாட்டத்துடன் விளையாட நினைக்கிறேன்.
9 மாதங்களுக்கு நான் என்னை உடற்தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் இரண்டு மாதங்கள் நான் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடலாம். இதுகுறித்து நான் முடிவெடுக்க வேண்டும், இருப்பினும் நிதானமும் வேண்டும். இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாததால், ஒவ்வோர் ஆட்டத்தையும் ஆர்வத்துடன் பார்க்கிறேன். ஒரு பார்வையாளனாக என் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. நான் களத்தில் இருக்கும்போது, என் இதயத்துடிப்பு அப்படி இருக்காது, ஆனால் ஒரு ரசிகனாக, அது வித்தியாசமானதுதான்" என்றார்.
இதன்மூலம் தோனி வரும் 2025 சீசனில் விளையாடுவார் என கூறப்படுகிறது. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தங்களின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். இந்த நிலையில்தான் தோனி தற்போது இப்படி பேசியுள்ளார் என்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
புதிய விதியின்படி தற்போது தோனி Uncapped வீரராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படலாம். அவரை 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்கவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பெரிய வீரர்களை ஏலத்தில் எடுக்க பணமும் கையில் இருக்கும்.
குறிப்பு: இந்திய அணியில் கடைசியாக பிளேயிங் லெவனில் விளையாடி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள், Uncapped வீரர்களாக விளையாடலாம்.