Morne morkel Morne morkel
கிரிக்கெட்

"வீரர்களுக்கு நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதே முக்கியம்" - இந்திய பௌலிங் கோச் மோர்னே மோர்கெல்

நான் இங்கு வரும்போது, இந்த அணியின் தரம் பற்றி நிறைய யோசித்தேன். இந்த அணியை நல்லபடியாக வழிநடத்தக்கூடிய தரமான சீனியர் வீரர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை பேசிக்கொண்டிருந்தேன்.

Viyan

இந்திய வீரர்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதும், தன்னுடைய அனுபவத்தைக் கொடுப்பதுமே மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மோர்னே மோர்கெல்.

மோர்னே மோர்கெல் - தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமீபத்தில் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆன பிறகு, அவரோடு பணியாற்றிய பயிற்சியாளர்கள் இந்திய அணியில் இணைந்திருக்கின்றனர். ரயன் டென் டோஸ்காடே ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மோர்னே மோர்கலும் இணைந்திருக்கிறார்.

இந்தப் பதவிக்குத் தேர்வுச் செய்யப்பட்டதைப் பற்றிப் பேசிய மோர்கெல், "நான் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டது மிகவும் சிறப்பான தருணம். ஒரு 5-7 நிமிடங்கள் நான் அதை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதன்பிறகு அதை என் குடும்பத்தோடு பகிர்ந்துகொண்டேன். நான் செய்த முதல் விஷயம் என் தந்தைக்கு போன் செய்தது தான். அவரிடம் நான் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகியிருப்பது பற்றிக் கூறினேன். முதலில் நான் என் மனைவியிடம் சொல்லவில்லை. பொதுவாக முதலில் மனைவியிடம் சொல்லுங்கள் என்பார்கள். ஆனால் நான் முதலில் என் தந்தையிடம் தான் தெரிவித்தேன்.

இந்த சவாலை எடுத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நிச்சயம் வெற்றி பெறவேண்டும் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என்று எனக்குப் புரியும். நன்றாகவே தெரியும். அதிர்ஷ்டவசமாக அதை நான் விளையாடும் காலகட்டத்திலேயே அனுபவத்திருக்கிறேன். அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்" என்று கூறினார் அவர்.

இந்திய அணியின் பயிற்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கிவிட்ட அவர், அணி பற்றியும், இந்த அணியில் தான் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் கூறினார். "இந்த இந்திய அணியின் செட்-அப் தானாக சிறப்பாக இயங்கும் ஒன்று. அதைப் பராமரிதும், சில சிறு முன்னேற்றங்களை ஏற்படுத்துவதுமே எங்களுடையே இலக்கு. நான் இங்கு வரும்போது, இந்த அணியின் தரம் பற்றி நிறைய யோசித்தேன். இந்த அணியை நல்லபடியாக வழிநடத்தக்கூடிய தரமான சீனியர் வீரர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை பேசிக்கொண்டிருந்தேன். அவர்களை நல்லபடியாக சப்போர்ட் செய்து, எங்களால் கொடுக்க முடிந்த நல்ல ஆலோசனைகள் கொடுக்கவேண்டும் என்பது தான் எங்களுக்கு இருக்கும் பொறுப்பு.

இதில் ஒரு சில வீரர்களுக்கு எதிராக நான் நிறைய விளையாடியிருக்கிறேன். ஐபிஎல் தொடரின்போது ஒருசில வீரர்களோடு இணைந்து விளையாடியிருக்கிறேன். இப்போது இந்த அணியில் இணைந்து உறவுகளையும் நட்புகளையும் உருவாக்குவது மிகவும் முக்கியம்.

இப்போதைக்கு எங்களுக்கான இலக்கு வீரர்களை நன்கு புரிந்துகொள்வது, அவர்களின் பலங்களை, பலவீனங்களை புரிந்துகொள்வது போன்றவை. அவற்றை உணர்ந்துகொண்டு அடுத்து வரும் தொடருக்கு ஏற்ப தேவையான விதைகளை விதைப்பது முக்கியம். இப்போது அதுபற்றிய ஆலோசனைகள் தான் நடந்துகொண்டிருக்கிறது. வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு புரொஃபஷனலாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இது மிகவும் நல்ல விஷயம். நல்ல முன்னேற்றம் காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திறமை இருக்கிறது என்பது ஒரு விஷயம். ஆனால் அப்படியான வீரர்களை மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையிலும் எப்படி நல்ல மனநிலையில் வைத்திருக்கிறோம் என்பது முக்கியம். இந்திய அணிக்கு விளையாடுவது என்பது மிகப் பெரிய விஷயம். அங்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அதனால், என்னை பொறுத்தவரை இருக்கும் அனுபவத்தை நல்லபடியாக வீரர்களுக்குப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் சிறப்பாக செட்டிலாக உதவவேண்டும்.

ஒரு வீரருக்கு அந்த சூழ்நிலை நல்லபடியாக அமைந்துவிட்டால், அவர்களது சிறந்த செயல்பாடு தானாக வந்துவிடும். அதனால், அவர்களை சரியாகப் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. அங்கிருந்து அவர்களின் திறனை அதிகரித்து ஒரு தரத்துக்குக் கொண்டுவரவேண்டும்" என்று கூறினார் மோர்கெல்.