shami web
கிரிக்கெட்

"ரோகித் வலைப்பயிற்சியில் என்னை எதிர்கொள்ளவே விரும்ப மாட்டார்.. கோலி எரிச்சலடைவார்..’ - முகமது ஷமி

Rishan Vengai

உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் எனவும், சிறந்த சீம் பொசிசன் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பவுலர் எனவும் பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களால் புகழப்படுபவர் முகமது ஷமி. தன்னுடைய ப்ரைம் ஃபார்மில் இருந்தால் உலகத்தின் எந்த தலைசிறந்த வீரராக இருந்தாலும் திணறடிக்க கூடிய பந்துவீச்சை வைத்திருக்கும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, இந்திய கிரிக்கெட்டின் அரிதான பவுலராக பார்க்கப்படுகிறார்.

shami

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிகப்பட்டவர், இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்துவருகிறார். படிப்படியாக வலைப்பயிற்சிக்கு திரும்பிவரும் முகமது ஷமி, சமீபத்தில் இந்திய அணியில் தன்னுடைய நண்பர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரோகித் என்னை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்..

சமீபத்தில் சுபங்கர் மிஸ்ரா உடனான போட்காஸ்ட் ஒன்றில் பேசியிருக்கும் முகமது ஷமி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடனான தன்னுடைய நட்பை பகிர்ந்துகொண்டார்.

இருவர் குறித்தும் பேசிய ஷமி, “ரோகித் சர்மா என்னை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள விரும்ப மாட்டார். அவருக்கு எதிராக பேட்செய்யமாட்டேன் என்று கூறிவிடுவார். விராட் கோலியை நான் இரண்டுமுறை அவுட்டாக்கிவிட்டால் எரிச்சலடைவார். ஆனால் நானும் விராட்டும் பயிற்சி அமர்வுகளில் ஒருவருக்கு ஒருவர் எதிர்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் இருவரும் சவால்களை விரும்புகிறோம். எனது பந்து வீச்சுகளில் அவர் நல்ல ஷாட்களை ஆடுவார், நான் அவரை அவுட் செய்வதில் கவனம் செலுத்துவேன்” என்று முகமது ஷமி கூறினார்.

முகமது ஷமி | முகமது சிராஜ்

மேலும் விராட் கோலியின் டி20 ஓய்வு குறித்து பேசிய அவர், “விராட் கோலி சரியான நேரத்தில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டி20 உலகக் கோப்பையை வென்றது ஒரு மிகப்பெரிய தருணம் என்பதால் விராட் சரியான முடிவை எடுத்துள்ளார். என் வாழ்விலும் அப்படியொரு தருணத்தை நான் பெற விரும்புகிறேன்” என்று ஷமி கூறியுள்ளார்.