shami, virat pt web
கிரிக்கெட்

“என்னிடம் இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” - சில போட்டிகளில் உட்கார வைக்கப்பட்டது குறித்து ஷமி!

2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் ஷமி 4 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தியும், இலங்கை மற்றும் நியூசி உடனான போட்டிகளில் களமிறக்கப்படவில்லை.

Angeshwar G

முஹம்மது ஷமி

முஹம்மது ஷமி, இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளர். காரணம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர். அதுமட்டுமின்றி, 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை வீழ்த்தி, ஒட்டுமொத்தமான கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளார்.

இதுஒருபுறம் இருக்கட்டும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியை யாராலும் அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது. அரையிறுதியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

ஆனால், அதற்கு முந்தைய, இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி இந்திய ரசிகர்களுக்கு சற்றே புதிரான ஒன்றாகவே இருந்தது. ஏனெனில், 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த ஷமி 14 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் தலா 4 விக்கெட்கள், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் என 14 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

களமிறக்கப்படாத ஷமி

ஆனாலும், இலங்கைக்கு எதிரான கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் அவரை அணி நிர்வாகம் உட்கார வைத்தது. நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் களமிறக்கப்படவில்லை. இந்தப் போட்டியில்தான் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. முன்னதாகக்கூட, இந்திய அணி விளையாடிய முதல் 4 போட்டிகளும் ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில்தான், 2019 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் குறித்து ஷமி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு ஷமி கொடுத்த நேர்காணலில் இதுதொடர்பாக பேசியுள்ளார். அதில், “2019 ஆம் ஆண்டு முதல் சிலபோட்டிகளில் நான் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களையும், பின் ஐந்து மற்றும் 4 என அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்களை எடுத்தேன். 2023 ஆம் ஆண்டும் இதே போன்று நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. பின் அதிகமான விக்கெட்களை வீழ்த்தினேன்.

என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்

நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவைதான். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.