உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் இந்திய அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் முகமது ஷமி. இதனால் முகமது ஷமி கிரிக்கெட் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி பிரபலமாகியுள்ளார். எனவே ஷமியை தங்கள் விளம்பர தூதராக்க பல நிறுவனங்கள் போட்டிபோடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூமா, ஹெல் ஆற்றல் பானம், விஷன் லெவன் ஃபேன்டசி ஆப் ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ள ஷமிக்கு மேலும் பல வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. குறிப்பாக ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள், மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், ஷமியை தங்கள் விளம்பர தூதராக நியமிக்க வரிசைகட்டி வந்துகொண்டுள்ளதாகவும் இவற்றில் சிலவற்றுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் ஷமியை நிர்வகித்து வரும் விளையாட்டு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷமிக்கான விளம்பர கட்டணம் உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன் 50 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், அது தற்போது ஒரு கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில் ஷமியை இன்ஸ்டாகிராம் சமூக தளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கையும் ஒரு கோடியாக அதிகரித்துள்ளது.