நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் முகமது ஷமி. உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஐம்பது விக்கெட்களை வெகு விரைவாக வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் ஷமி வசம் வந்தது. 17 இன்னிங்ஸ்களில் முகம்மது ஷமி 50 விக்கெட்கள் இலக்கை அடைந்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் மிட்ச்செல் ஸ்டார்க் 19 இன்னிங்சில் 50 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதல் 4 போட்டிகளில் சேர்க்கப்படாத முகமது ஷமி, அதற்கடுத்த 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 3 முறை ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றும் சாதித்துள்ளார்.
முதல் நான்கு போட்டிகளில் களம் காணாத ஷமி, வாய்ப்பு கிடைத்த போது சிங்கமென சீறி இந்தியாவின் வெற்றிக்கு
உதவியதோடு, பல்வேறு சாதனைகளையும் தனதாக்கியுள்ளார்.
அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.