Sanju Samson - Kaif Twitter
கிரிக்கெட்

“இஷான், அக்சரெல்லாம் சரிவர மாட்டார்கள் ; உலகக்கோப்பைக்கு சாம்சன் தயாராக இருக்கிறார்”- முகமது கைஃப்

முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், “இஷான் கிஷன் மற்றும் அக்சர் பட்டேலை விட எதற்காக சாம்சன் உலகக்கோப்பைக்கான வீரராக இருப்பார்” என கூறியுள்ளார்.

Rishan Vengai

ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் என 3 மிடில் ஆர்டர் வீரர்களும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியானது உலகக்கோப்பைக்கான வெல்லும் அணி பட்டியலில் பலவீனமான அணியாக தெரிகிறது. ஒரு புறம் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை பலவீனமாக தெரியும் நிலையில், மறுபுறம் பும்ரா இல்லாமல் பந்துவீச்சாளர்கள் யூனிட்டும் பலவீனமாகவே தெரிகிறது.

இந்நிலையில் “ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் போன்ற ரெகுலர் வீரர்கள் அணியில் இல்லாத போது இஷான் கிஷனோ அல்லது அக்சர் பட்டேலோ இடையில் விளையாட சரியாக வரமாட்டார்கள். சஞ்சு சாம்சன் அதற்கு சரியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.

“சாம்சன் உலகக்கோப்பைக்கு தயாராக இருக்கிறார்!”

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முகமது கைஃப் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார். அப்போது இந்திய அணியின் பேட்டிங் தரவரிசை குறித்து பேசிய அவர், “இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 4-வது இடத்தில் இஷான் கிஷனையோ அக்சர் பட்டேலையோ அனுப்புவது உண்மையில் நல்ல யோசனையாக இருக்காது என நினைக்கிறேன். அந்த இடத்தில் உங்களுக்கு இடது கை ஸ்பின் மற்றும் லெக் ஸ்பின் வீசும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு பேட்டர் தான் தேவை. அந்தவகையில் பார்த்தால் 4-வது அல்லது 5-வது இடத்தில் விளையாடுவதற்கான திறமை சஞ்சு சாம்சனுக்கு இருக்கிறது. அவர் இதற்கு முன்பும் அதை செய்து காட்டியுள்ளார்.

IND vs WI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியை வைத்து பார்த்தால், ‘வென்றேயாக வேண்டிய போட்டி’ என்பதை அறிந்து அவர் பேட்டிங் செய்துள்ளார். ‘இந்த போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், நமக்கு இனி அணியில் இடம் கிடைக்காது... குறிப்பாக உலகக் கோப்பைக்கான அணியிலும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்’ என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டார் சஞ்சு சாம்சன். இப்படி இரண்டு விதமான அழுத்தத்தோடு விளையாடினாலும், அற்புதமான பேட்டிங் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்தினார். அவருடைய ஆட்டத்தை பார்த்து உண்மையில் நான் ஈர்க்கப்பட்டேன். அவர் உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

“வெஸ்ட் இண்டீஸ் தொடரை வைத்து உறுதி செய்ய முடியாது! ஆசிய கோப்பையை பார்க்க வேண்டும்!”

மேலும் "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வைத்து அணி வீரர்களை உறுதி செய்ய முடியாது. ஏனெனில் அந்த அணியே போராடி வருகிறது. அவர்கள் உலகக் கோப்பைக்கு கூட தகுதி பெறவில்லை. ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஒரு முக்கியமான தொடராக இருக்கும். சப் காண்டினண்ட் அணிகளுக்கு எதிராக இந்தியா எப்படி செயல்பட போகிறது என்பதும், எந்த 15 வீரர்களை உறுதி செய்யப்போகிறது என்பதும் முக்கியமான ஒன்று. தொடருக்கு பின் உங்களுடைய அணி வீரர்கள் எந்தெந்த இடத்தில் ஆடப்போகிறார்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியமானது" என்று கூறியுள்ளார்.