முகமது கைஃப் Twitter
கிரிக்கெட்

சிங்கிள் எடுக்க சொன்ன தாதா.. வாயடைக்க வைத்த கைஃப்! அன்று வென்றது 22 வயது இளைஞனின் தன்னம்பிக்கை!

வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டி, ரன்ரேட் அதிகரித்து கொண்டே இருக்க சிங்கிள் எடுத்து யுவராஜ் சிங்கிற்கு ஸ்டிரைக் கொடுக்க சொல்லி கையசைப்பார் கங்குலி. ஆனால் அடுத்த பந்தையே தூக்கி சிக்சருக்கு அனுப்பிய முகமது கைஃப் கங்குலியை கைக்கட்டி அமரவைப்பார்.

Rishan Vengai

கிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்து என்றால், அதன் 'மெக்கா' என்று அழைக்கப்படுவது லார்ட்ஸ் மைதானம். இந்த மைதானத்தில் விளையாடுவது மிகவும் கெளரவமான விஷயமாக உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கருதுவார்கள். ஆனால், அந்த லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி வெற்றியின் மிகுதியில் சட்டையைக் கழற்றிச் சுழற்றிய கெத்தான தருணத்தை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் மறக்கவே முடியாது. அதற்கு வித்திட்டவர் இந்தியாவின் சிறந்த ஃபீல்டராகவும், மிடில் ஆர்டர் வீரராகவும் ஜொலித்த முகமது கைஃப் தான் என்றால் மிகையாகாது.

இங்கிலாந்தின் கோட்டைக்கே சென்று இந்திய கொடியை நாட்டி கெத்துக்காட்டிய தருணத்திற்கு சொந்தக்காரர் முகமது கைஃப் என்னும் ’காப்பான்’ மட்டுமே.

வான்கடே மைதானத்தில் சட்டையை கழற்றி சுற்றிய பிளிண்டாஃப்!

2002-ல் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகளில் 3-1 என ஆதிக்கம் செலுத்திய இந்தியா கடைசி 2 போட்டிகளில் 2 மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையும்.

andrew flintoff

வான்கடே மைதானத்தில் கிடைத்த தொடரை சமன்செய்யும் வெற்றியை தனது சட்டையை கழற்றி வெறித்தனமாக கொண்டாடுவார் பிளின்டாஃப். இந்நிலையில் தான் அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே இங்கிலாந்துக்கு சென்று நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி.

40 ரன்களில் 4 விக்கெட்டை இழந்த இந்தியா! போராடிய கைஃப்!

இந்தியா, இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. ஆட்டம் ஆரம்பித்த ஏழாவது ஓவரில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார் நிக் நைட். ஆனால், அதன் பின்பு கேப்டன் நாசர் ஹுசைனும், மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக்கும் இந்திய பவுலர்களை நாலாபுறமும் சிதறவிட்டனர். 30 ஓவர்கள் ஆடிய இந்த ஜோடி, 180 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். அற்புதமாக ஆடிய ட்ரஸ்கோத்திக் - நாசர் ஹுசைன் இருவரும் சதமடித்து அசத்தினர். அவர்கள் தன் ஒருபுறம் என்றால் இந்தியாவில் சட்டையை கழற்றி சுற்றிய ஃபிளிண்டாஃப் இறுதியாக வந்து பட்டையை கிளப்பி 40 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது.

NatWest Series 2002 Final

ஒரு பழி தீர்க்கும் படலமாகவும், இந்தியாவின் கெத்தையும், மானத்தையும் நிலைநிறுத்தும் ஒரு போட்டியாகவும் தொடங்கியது சேஸிங். விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் அதிரடி காட்டிய தாதா மற்றும் சேவாக் இருவரும் 14.3 ஓவரில் 106 ரன்கள் குவிக்க, இந்திய அணி ஒரு மின்னல்வேக சேஸிங்கில் இருந்தது. ஆனால், முதலாவது விக்கெட்டாக கங்குலி ஆட்டமிழக்க, அடுத்த 40 ரன்களைக் சேர்ப்பதற்குள் சீட்டுக்கட்டு போல் சேவாக், டிராவிட், சச்சின் என முக்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடையை கட்ட ஆட்டம் கண்டது இந்திய அணி. இப்போது போட்டியை தாங்கிப்பிடிக்க யுவராஜ் மற்றும் முகமது கைஃப் இரண்டு இளைஞர்கள் போராடினர்.

சிங்கிள் எடுத்து கொடுக்க சொன்ன கங்குலி! தன்னம்பிக்கையோடு சிக்சர் அடித்த கைஃப்!

இந்தியாவின் ஸ்டார் பேட்டர்கள் அனைவரும் ஆட்டமிழக்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் நம்பிக்கை போனது. இனி வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என நினைத்தபோதுதான் யுவராஜ் சிங்கும் முகமது கைஃப்பும் இந்திய அணியை இழுத்துபிடித்தனர். அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. விறுவிறுப்பான சேஸிங்கில் இடையில் ஒரு பந்தை முகமது கைஃப் டாட் வைக்க, கடுப்பான கங்குலி பெவிலியனில் இருந்து சிங்கிள் எடுத்து யுவராஜுக்கு ஸ்டிரைக் கொடுக்குமாறு முகமது கைஃபிற்கு சைகை செய்வார். சிங்கிள் எடுத்து கொடு யுவராஜ் சிக்சர் பவுண்டரி அடிப்பார் என கங்குலி கூற, அடுத்த பந்தையே சிக்சருக்கு அனுப்பிய முகமது கைஃப் கங்குலியின் எண்ணத்தை பொய் ஆக்கினார். அதற்கு பிறகு கைக்கட்டி மேட்ச்சை வேடிக்கை பார்த்த தாதா, பின்னர் எந்த சைகையும் செய்யவில்லை.

இந்தியா இலக்கை நெருங்கிக்கொண்டிருந்த முக்கியமான நேரத்தில் யுவராஜ் சிங் அவுட் ஆகி வெளியேற, இந்தியாவின் வெற்றியின் நம்பிக்கை கேள்விக்குறியானது. இங்கிலாந்து அணியும் இந்தியாவை இனி வீழ்த்திவிடலாம் என்ற தோரணைக்கே சென்றது. ஆனால் களத்தில் தன்னம்பிக்கையோடு போராடிய இளைஞர் முகமது கைஃப் ஓவருக்கு ஒரு பவுண்டரியை விரட்டிக்கொண்டே இருக்க, மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டது.

kaif

என்ன தான் அவர் பவுண்டரியை அடித்தாலும், அவரால் முடியுமா? என்ற கேள்வி மட்டும் போட்டியை முடிக்கும் வரை இருந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் பெரிய அளவில் கைஃப் அதுவரை ஒடிஐ போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு பெரிய முத்தரப்பு தொடரில் பங்கேற்பது அதுதான் அவருக்கு முதல்முறை, அந்த வருடம் தான் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலேயே அறிமுகமாகியிருந்தார். ஆனால் அப்படியான இளம் வயதில் இந்தியாவின் நம்பிக்கையை பொய்யாக்காத முகமது கைஃப் கடைசி ஓவரில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்று அசத்தினார்.

Kaif

அப்போது தான் கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய சட்டையை கழற்றி சுற்றி பதிலுக்கு பதில் என்று பிளிண்டாஃப் செய்கைக்கு தரமான பதில் செய்கை செய்வார். அன்று வென்றது இந்தியாவோ அல்லது கங்குலியின் வைராக்கியமோ அல்ல. ”அன்று வென்றது முகமது கைஃப் என்ற ஒரு 20 வயது இளைஞனின் தன்னம்பிக்கை”.

Ganguly

முகமது கைஃபின் பிறந்தநாளான இன்று, அவரை போன்று தற்போதைய இளைஞர்களும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு முக்கியமான போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரின் பேராசை.