moeen ali  Twitter
கிரிக்கெட்

குற்றத்தை ஒப்புக்கொண்ட மொயின் அலி! அபராதம் விதித்த ஐசிசி! மைதானத்தில் நடந்தது என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

Rishan Vengai

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிவரும் இங்கிலாந்து அணியில் மொயின் அலியும் இடம் பெற்றுள்ளார். ஓய்வு பெறுவதாக அறிவித்த மொயின் அலியை மீண்டும் அணிக்குள் எடுத்துவந்தது இங்கிலாந்து அணி. இந்நிலையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள மொயின் அலி, முதல் இன்னிங்ஸிலேயே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கையில் உலர்த்தும் முகவரை வைத்து தேய்த்த மொயின் அலி!

முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளார் அறிவித்ததால், முதல் நாள் முடிவிலேயே ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடியது. இந்நிலையில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டிரவிஸ் ஹெட் மற்றும் காம்ரான் க்ரீன் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டார் மொயின். இந்த பக்கமா அந்த பக்கமா என்ற நிலையில் போட்டி சென்ற போது தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.

2-ம் நாள் போட்டியில் வீசப்பட்ட 89-வது ஓவரில், எல்லைக்கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி, தன்னுடைய கைகளில் உலர்த்தும் முகவரைப் பயன்படுத்தும் போது கேமராவில் பிடிபட்டார். கள அம்பயரின் குற்றச்சாட்டை அடுத்து மொயின் அலி தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

moeen ali

மேலும் உலர்த்தும் முகவரை தன்னுடைய விரலில் மட்டும் தான் பயன்படுத்தியதாகவும், பந்தில் செயற்கை பொருளை பயன்படுத்தவில்லை என்றும் மொயின் அலி கூறியதால் அம்பயருக்கு வேறுவிதமான குழப்பங்கள் ஏற்படாமல் இருந்தது. மொயின் அலியின் அந்த கூற்றால் பந்தின் நிலை மாறவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டனர்.

25% அபராதம் விதிக்கப்பட்ட மொயின் அலி!

மொயின் அலி பந்துவீசும் முன் கையில் ஈரத்தை உலரவைக்கும் ரசாயனத்தை பூசிக்கொண்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

moeen ali

இதனால், போட்டிக்கான ஊதியத்தில் 25 சதவீதத்தை மொயின் அலி அபராதமாக செலுத்தவேண்டி இருக்கும். தனது குற்றத்தை மொயின் அலி ஒப்புக்கொண்டதால், அவரிடம் விசாரணை எதுவும் இருக்காது என ஐசிசி தெரிவித்துள்ளது.