ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத், மிதாலி ராஜ் pt web
கிரிக்கெட்

WT20 உலகக்கோப்பை: எங்கே சொதப்பியது இந்தியா? அடுத்த கேப்டனாக யார் இருக்கலாம்? மிதாலி ராஜ் கூறுவதென்ன?

நடந்து வரும் பெண்கள் டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றோடு இந்திய அணி வெளியேறியிருக்கும் நிலையில், அணி நிர்வாகம் கேப்டனை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான் மிதாலி ராஜ்.

Viyan

11 பேரில் 2 பேர் மட்டுமே சோபித்தனர்

நடந்து வரும் பெண்கள் டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றோடு இந்திய அணி வெளியேறியிருக்கும் நிலையில், அணி நிர்வாகம் கேப்டனை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான் மிதாலி ராஜ். இந்திய அணி தயாரான விதத்தை கடுமையாக சாடியிருக்கும் அவர் ஜெமீமா ராட்ரிக்யூஸை அடுத்த கேப்டனாக நியமக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தை வென்றால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால், இந்தியா தோற்று வெளியேறியது. இதுபற்றிப் பேசிய மிதாலி, “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தக் கடைசிப் போட்டியில் ராதா யாதவ் மற்றும் ஜெமீமா ராட்ரீக்யூஸ் தவிர யாரும் பெரிய அளவு சோபிக்கவில்லை. 11 பேர் கொண்ட அணியில் வெறும் இருவர் மட்டும் சோபித்தால் போதாது. அதேபோல் ஃபிட்னஸ் விஷயத்திலும் ஒரு பெஞ்ச்மார்க் வைக்கவேண்டும். இதெல்லாம் நீங்கள் ஓரிரு மாதங்களில் செய்யக்கூடிய விஷயம் அல்ல. வருடம் முழுக்க அதற்கான திட்டங்கள் இருக்கவேண்டும். வெறுமனே ஒரு தொடருக்கு முன்பு கேம்ப் வைத்து ஃபீல்டிங்கில் மாற்றம் காணவேண்டும் என்று நினைத்தால் அது வேலைக்கு ஆகாது” என்று கூறினார்.

வீராங்கனைகள் சீக்கிரம் செட் ஆகவில்லை

மேலும், இந்த உலகக் கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் செட் ஆகவில்லை என்பதையும் முக்கியக் காரணமாகக் கூறினார் அவர். "ஸ்லோவான ஆடுகளங்களுக்கு செட் ஆக இந்திய வீராங்கனைகள் நேரம் எடுத்துக்கொண்டது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இது ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இல்லை. இதுவொரு சிறிய தொடர்.

விரைவிலேயே சூழ்நிலைக்கு செட் ஆகிவிடவேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் அப்படியொரு ஆட்டத்தை நமக்கு எதிராக ஆடினார். இத்தனைக்கும் அவர் ஸ்லோவான ஆடுகளங்களில் ஆடிப் பழக்கப்பட்டவர் அல்ல. அப்படியிருக்கையில் நாம் அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருக்கக் கூடாது" என்று கூறிய மிதாலி, இந்த உலகக் கோப்பை தோல்விக்கு சமீபத்திய செயல்பாட்டை மட்டும் காரணமாகக் கூறவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி தேக்க நிலையை அடைந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

"கடந்த 2-3 ஆண்டுகளாக இந்த அணி எந்த வகையிலும் முன்னேறவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன் கூறுகிறேனென்றால், சிறந்த அணிகளை வெல்வதற்காகத்தான் நாம் தயாராகிறோம். ஆனால் அது நடப்பதில்லை. மற்ற அணிகளை வீழ்த்துவதில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம். ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டோம். தென்னாப்பிரிக்கா போன்ற அணி ஸ்குவாட் டெப்த் இல்லையென்றாலும் நன்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் நாம் முன்னேறவில்லை.

இந்தியா சொதப்பிய இடங்கள் என்னென்ன?

ஆசிய கோப்பையின்போது நான் வர்ணனை செய்துகொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், அப்போது என்ன நடந்தது என்று எனக்குப் புரியவேயில்லை. உலகக் கோப்பைக்கு முன் அதுதான் கடைசித் தொடர் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அப்படியிருக்கும்போது உங்கள் திட்டங்களில் குறைந்தபட்சம் 70-80 சதவிகிதமாவது செயல்படுத்தியிருக்க வேண்டும். உதாரணமக 5, 6 இடங்களில் பேட்டிங் செய்யப்போவது யார் என்பதில் ஒரு உறுதி இல்லை. அவர்கள் அந்தத் தொடருக்கான ஆப்ஷன்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது போலத் தெரிந்தது.

ஆசிய கோப்பையின்போது சிறிய அணிகளுக்கு எதிராக பெஞ்ச் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் அணி நிர்வாகம் அதைச் செய்யவேயில்லை. சரி ஆண்கள் அணி ஏன் நன்றாக செயல்படுகிறது. ஒரு பெரிய தொடருக்குப் பின்பு அவர்கள் பல்வேறு வீரர்களை முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஸ்குவாட் டெப்த் பற்றிப் பேசுகிறோம் என்றால், எப்போது நாம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறோம்" என்று இந்தியா சொதப்பிய இடங்களை சுட்டிக் காட்டினார் மிதாலி ராஜ்.

கேப்டனை மாற்ற வேண்டும்

மேலும், இந்தியா அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டுமெனில் அணி நிர்வாகம் கேப்டனை மாற்றவேண்டும் என்று கூறினார் மிதாலி ராஜ். "ஒருவேளை கேப்டனை மாற்றவேண்டும் தேர்வுக்குழு முடிவு செய்தால், ஒரு இளம் கேப்டனை தேர்வு செய்யவேண்டும் என்று நான் சொல்வேன். இதுதான் மாற்றத்துக்கு சரியான நேரம். அடுத்த ஆண்டு இன்னொரு உலகக் கோப்பை வரவிருக்கும் நிலையில், இதற்கு மேலும் தாமதிக்கக்கூடாது.

ஒருவேளை இப்போது மாற்றவில்லை என்றால், மாற்றாமல் விட்டுவிடுவது நல்லது. உலகக் கோப்பைக்கு அருகே அதைச் செய்யக்கூடாது. துணைக் கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா இருக்கிறார். இருந்தாலும் ஜெமி போன்ற ஒரு வீராங்கனையால் அதிகம் பங்களிக்க முடியும் என்று நினைக்கிறேன். அவருக்கு 24 வயதுதான் ஆகிறது. மிகவும் இளமையானவர். அவரால் களத்தில் அந்த உத்வேகத்தைக் கொடுக்க முடியும். அனைவருக்காகவும் பேசக்கூடியவர். இந்த உலகக் கோப்பையில் கூட அவரது செயல்பாட்டைப் பார்த்து நான் வியந்தேன்.

ஜெமீமா

சில சின்னச் சின்ன கேமியோ ரோல்கள் செய்திருந்தாலும், அவராலும் நல்ல தொடக்கங்களை பெரிய இன்னிங்ஸ்களாக மாற்ற முடியவில்லை. இருந்தாலும் எப்போதுமே அணிக்கு நல்லதொரு பாதையை அவர் அமைத்துக்கொடுத்தார். நன்றாக சென்றுகொண்டிருக்கும்போது ஆட்டத்தின் வேகத்தை இன்னும் துரிதப்படுத்தினார்" என்று ஜெமீமாவைப் பாராட்டிப் பேசினார் அவர்.