2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலம் தொடங்கியதில் இருந்தே கலைக்கட்ட தொடங்கியது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பல வீரர்கள் அதிக விலைக்கு சென்று மிரட்டி வருகின்றனர்.
அந்தவகையில் இதற்கு முந்தைய எந்த ஏலத்திலும் செல்லாத விதத்தில் 20 கோடி ரூபாயை தாண்டி 2 வீரர்கள் சென்றிருப்பது மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் 20.50 கோடி என்ற அதிகப்படியான ஏலத்தொகைக்கு சென்ற நிலையில், கிட்டத்தட்ட 1 மணி நேரத்தில் அவருடைய அதிக விலைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற சாதனையை உடைத்துள்ளார் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் ஸ்டார்க்.
பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள், ஆல் ரவுண்டர்கள் வரிசைகள் முதலில் ஏலத்திற்கு விடப்படும் நிலையில் பேட்ஸ்மேன்களில் 7.40 கோடிக்கு ரோவ்மன் பவெல்லும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 14 கோடி ரூபாய்க்கு டேரில் மிட்செல்லும் அதிகவிலைக்கு சென்றனர். ஆனால் பவுலர்கள் வரிசை வரும்போது பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இரண்டு வீரர்களும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிகவிலைக்கு சென்று மிரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
பாட் கம்மின்ஸ்கான போட்டியில் RCB மற்றும் SRH அணிகள் 20 கோடிவரை ஏலத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு ஈடுபட்டனர். முடிவில் பாட்கம்மின்ஸை 20.50 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிகப்படியான விலைக்கு சென்ற வீரர் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்த நிலையில், 1 மணி நேரத்திற்குள் அந்த சாதனையை உடைத்தார் மிட்செல் ஸ்டார்க்.
மிட்செல் ஸ்டார்க் ஏலமானது அதிகவிலைக்கு செல்லும் என்ற எதிர்ப்பார்த்து ஏற்கனவே இருந்தது. கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து ஐபிஎல் ஏலத்திற்கு வரும் ஸ்டார்க்கிற்கு முதலில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டிப்போட்டன. 10 கோடி வரை மும்பை இந்தியன்ஸ் அணி சென்ற நிலையில் அதற்கு பிறகு ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புகுந்தன. இந்த 2 அணிகளும் ஸ்டார்க்கை வாங்க தீவிரமாக போட்டியிட்டன. 20 கோடிவரை சென்ற இந்த ஏலம் அதற்கு பிறகும் சூடுபிடித்தது.
24.50 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஸ்டார்க்கை சீல் செய்த நிலையில், கொல்கத்தா பின்வாங்கும் என நினைத்தால் 24.75 கோடி ரூபாய்க்கு சென்ற மிரட்சியை ஏற்படுத்தியது. முடிவில் 24.75 கோடிக்கு மிட்செல் ஸ்டார்க்கை விலைக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவிலைக்கு சென்ற வீரராக மிட்செல் ஸ்டார்க் மாறியுள்ளார்.
மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேவிஸ் ஹெட் 6.8 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இவரையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது. டேவிஸ் ஹெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கோப்பைக் கனவை சிதைத்தவர்.
மிட்செல் ஸ்டார்க் - 24.75 கோடி - KKR
பேட் கம்மின்ஸ் - 20.50 கோடி - SRH
டேரில் மிட்செல் - 14 கோடி - CSK
ஹர்சல் பட்டேல் - 11.75 கோடி - PBKS
அல்சாரி ஜோசப் - 11.50 கோடி - RCB