சிறந்த பவுலர்கள் இருந்த காலகட்டத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 41 சராசரியுடன் சிறப்பான பேட்டிங்கால் ஆதிக்கம் செலுத்தியவர் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன். 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடித்து 41 சராசரியுடன் 5719 ரன்களை குவித்த மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணியை கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளார். அவர் முதல்தர போட்டிகளில் 16295 ரன்கள் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இங்கிலாந்து வீரர்கள் வேகப்பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது எல்லோருமே அறிந்தவிசயம் தான், ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டனான மைக்கேல் வாகனின் மகன் தொடக்க பேட்ஸ்மேனாக இருப்பது மட்டுமில்லாமல், சுழற்பந்துவீச்சிலும் அசத்திவருகிறார்.
தற்போது நடைபெற்றுவரும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மைக்கேல் வாகன் மகன் ஆர்ச்சி வாகன், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்காக போராடிவருகிறார்.
2024 கவுண்டி சாம்பியன்ஷிப்பின் 59வது போட்டியில் சர்ரே மற்றும் சோமர்செட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சோமர்செட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 18 வயதேயான ஆர்ச்சி வாகன், 107 பந்துகளை எதிர்கொண்டு விளையாடி 44 ரன்கள் அடித்தார். அதற்குபிறகு வந்த டாம் பாண்டன் சதமடித்து அசத்த முதல் இன்னிங்ஸில் சோமர்செட் 317 ரன்களை எடுத்தது. சர்ரே அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதற்குபிறகு விளையாடிய சர்ரே அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றாலும், ஆர்ச்சி வாகனின் அபாரமான சுழற்பந்துவீச்சால் 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுழற்பந்துவீச்சில் மிரட்டிய ஆர்ச்சி வாகன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருடன் இங்கிலாந்தின் தற்போதைய நம்பிக்கை ஸ்பின்னரான ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகிப் மற்றும் ஜாக் லீச் இருவரும் அணியில் இருந்தாலும் 18 வயதான மைக்கேல் வாகனின் மகன் தனித்து ஜொலித்தார்.
4 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சோமர்செட் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷாகிப் அல் ஹசன் 224 ரன்களுக்கு சுருட்டினார்.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சர்ரே அணி விளையாடிவருகிறது. தொடக்க வீரரான கேப்டன் ரோரியை 15 ரன்னில் வெளியேற்றிய ஆர்ச்சி, அடுத்துவந்த ரியான் பட்டேலை 0 ரன்னில் அவுட்டாக்கி வெளியேற்றினார். ஆர்ச்சியின் அசத்தலான பந்துவீச்சால் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த சர்ரே விளையாடிவருகிறது, தன்னுடைய அணியின் வெற்றிக்காக ஆர்ச்சி போராடிவருகிறார். இது அவருக்கு இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆர்ச்சி வாகன் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இங்கிலாந்துக்கு ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிடைக்க அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.