kuldeep yadav cricinfo
கிரிக்கெட்

“இடது கை ஷேன் வார்னே” - 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப்பை புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கிய குல்தீப் யாதவ், இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

Rishan Vengai

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 4வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணி களம்கண்டது.

ராஞ்சியில் தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தால் 353 ரன்கள் சேர்த்தது. அதற்கு பிறகு தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, ஷோயப் பஷீரின் அபாரமான பந்துவீச்சால் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

விரைவாக இந்தியா ஆல் அவுட்டாகிவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 131 பந்துகளை எதிர்கொண்டு தாக்குப்பிடித்த குல்தீப் யாதவ், ஜுரேல் 90 ரன்கள் எடுக்க உதவியதோடு இந்தியாவை 307 ரன்கள் எட்டுவதற்கு பெரிய காரணமாக அமைந்தார். அதன்பிறகு 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி நல்ல இலக்கை நிர்ணயிக்கவேண்டும் என போராடியது.

இங்கிலாந்தின் நம்பிக்கையை தகர்த்த குல்தீப் யாதவ்!

இந்தியாவுக்கு எதிராக நல்ல டோட்டலை நிர்ணயிக்க வேண்டும் என்ற கட்டாயத்தோடு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே டக்கெட், ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் மூன்றுபேரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி அசத்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என இங்கிலாந்து தடுமாறினாலும் களத்திலிருந்த ஜாக் கிராவ்லி அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடி அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் செட்டிலாகவிடாமல் பார்த்துக்கொண்டார். 91 பந்துகளில் 7 பவுண்டரிகளை விரட்டிய கிராவ்லி அரைசதமடித்து அசத்தினார்.

50 ரன்கள் பார்ட்னர்ஷிப்போடு சிறப்பாக சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து ஆட்டத்தில், ஒரு அற்புதமான டெலிவரியில் ஜாக் கிராவ்லியை போல்டாக்கி வெளியேற்றிய குல்தீப் யாதவ் ஸ்பீட் பிரேக்கராக வந்தார். அதற்கு பிறகு ஸ்டோக்ஸை போல்டாக்கிய குல்தீப், டாம் ஹார்ட்லி மற்றும் ராபின்சன் என இங்கிலாந்து அணியின் லோயர் மிடில் ஆர்டர் வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றி கலக்கிப்போட்டார். குல்தீப் 4 விக்கெட் வீழ்த்த, பின்னர் கடைசி விக்கெட்டுகளை அறுவடை செய்த அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்த இங்கிலாந்து 145 ரன்னில் ஆல்அவுட்டானது.

இடது கை ஷேன் வார்னே! - குல்தீப்பை பாராட்டிய வாகன்

குல்தீப்பின் அபாரமான பந்துவீச்சை பாராட்டியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், குல்தீப் யாதவை ஷேன் வார்னேவோடு ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.

குல்தீப் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வாகன், “இந்த போட்டியில் பாராட்டவேண்டும் என்றால் குல்தீப் யாதவைதான் பாராட்டவேண்டும். அவர் ஒரு இடது கை ஷேன் வார்னே போல பந்துவீசினார்” என்று பாராட்டியுள்ளார்.

192 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.